கரூர் மாவட்டத்தை சேர்ந்த விசுவநாதன் என்பவர் முகிலனுடன் அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் இணைந்து செயல்பட்டவர். இவரை சி.பி.சி.ஐ.டி போலிசார் முகிலன் மீதான் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அவருடைய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறும்போது, கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் புகலூரில் வசிப்பவர் விஸ்வநாதன். அண்ணன் தம்பிகள் ஐந்து பேர் கொண்ட பெரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அண்ணன் தம்பிகளுக்கு பாகப்பிரிவினை எழுத்துப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முடிவான பிறகு , அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் வாழ்ந்த விசுவநாதன் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார் .
அதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளை , இழப்புகளை சந்தித்து பின்பு புகழூரியிலேயே வந்து வாழ முடிவு செய்து வந்துள்ளார் . தனக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட குடும்ப சொத்துக்களை எல்லாம் ஏற்கனவே விற்று இலங்கை தமிழர்கள் ஆதரவு பணிகளுக்காக செலவு செய்ததால் கையில் ஒரு பைசா கூட இல்லாமல் புகழூருக்குத் திரும்ப வந்துள்ளார். தன்னுடைய அண்ணன் இளங்கோவனிடம் தனக்கு பெரிய மனது பண்ணி தமது மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விலைக்கு கடனாக கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதைக்கேட்ட விஸ்வநாதனின் அண்ணன் இளங்கோவன் நாங்கள் எந்த சொத்தையும் விலைக்குக் கொடுக்குற பழக்கம் இல்லை எனவே விலைக்கு கொடுக்க இயலாது.
ஆனால் தானமாகப் பெற்றுக் கொள்ள சம்மதித்தால் வீட்டில் மட்டுமல்ல அதோடு ஒட்டியுள்ள தோட்டத்தையும் இலவசமாக எழுதித் தர தயாராக இருக்கிறேன் என்று சொல்லி விஸ்வநாதனை நெகிழ வைத்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட விசுவநாதன் தனது பூர்வீக வீடு மற்றும் அதை ஒட்டிய தோட்டத்தை தன் அண்ணன் இளங்கோவிடமிருந்து தானமாக பெற்று வாழ்ந்து வருகின்ற போது, காவிரி ஆற்றில் அரசியல்வாதிகளால் ஏராளமான மணல் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை தொடங்கினார்.
அதன் மூலமாக கரூர் மாவட்ட பொதுமக்களை திரட்டி பலகட்ட போராட்டங்களை நடத்தினார். காவிரி ஆற்றுக்குள் இறங்கி நின்று போராடும் போராட்டம், பொதுக்கூட்டங்கள் என்று பலவகையான முறையில் போராட்டங்களை நடத்தினார்.
அவர் நடத்திய போராட்டங்களில் வைகோ, நல்லகண்ணு, பழ நெடுமாறன் உட்பட்ட ஏராளமான தலைவர்களை அழைத்து காவிரி பாதுகாப்பு கூட்டங்களை நடத்தினார். பழ நெடுமாறன், நல்லகண்ணுவும் ஆகியோர் காவிரி ஆற்றை பார்வையிட சென்ற பொழுது உடன் சென்ற என்னை மணல் கொள்ளையர்கள் காரை வழிமறித்து எனது இரண்டு கன்னத்திலும் கடுமையாக குத்தினார்கள்.
காவிரி ஆறு பாதுகாப்பு கூட்டங்களில் மற்றும் போராட்டங்களில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் முகிலன் மீது தற்போது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதியப்பட்டு நடந்து வருகிறது. அந்த வழக்கில் ஒரு ராஜேஸ்வரி என்ற பெண் முகிலன் தன்னை திருமணம் செய்வதாக சொல்லி தன்னுடன் பழகினார் என்று புகார் தெரிவித்துள்ளார் .
மேற்படி புகார்தாரர் ஆகிய ராஜேஸ்வரியும் முகிலனும் புகலூர் விசுவநாதன் அவர்கள் நடத்திய காவிரி பாதுகாப்பு போராட்டங்களில் பங்கேற்றவர்கள் .
அதன் காரணமாக "உங்கள் போராட்டங்களில் முகிலனும் ராஜேஸ்வரியும் கலந்து கொண்டிருக்கிறார்கள் எனவே முகிலனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டும் " என்று சிபிசிஐடி போலீஸார் விசுவநாதனிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதை விசுவநாதன் மறுத்து எனக்கு தெரிந்ததை தான் சொல்லுவேன் தெரியாததை சொல்ல முடியாது. நீங்கள் சொல்வதற்காக பொய்சாட்சி நான் சொல்ல முடியாது. முகிலனும் ராஜேஸ்வரியும் காவிரி பாதுகாப்பு மணல் கொள்ளை எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டார்கள் என்பதுதான் உண்மை. அதை நான் சொல்ல முடியும் . மற்றபடி அவர்கள் இருவரும் எப்படி பழகினார்கள் என்பதெல்லாம் பற்றி எனக்கு தெரியாது .எனக்கு தெரியாத விபரங்களை நான் எப்படி சொல்ல முடியும் என்று அவர் மறுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பொய் சாட்சி சொல்ல மறுத்ததன் காரணமாக முகிலனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இருந்த முறைகேடான தொடர்புக்கு விசுவநாதன் உதவியாக இருந்தார் என்றும் அது தொடர்பான வழக்கு சாட்சிகளை வழக்கு சாட்சியங்களை மறைத்தார் என்றும் கூட்டாக சதி புரிந்தார் என்றும் சொல்லி நேற்று 7./8/19 இரவு நேற்று நள்ளிரவு விஸ்வநாதன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை சுமார் ஐந்து முப்பது மணிக்கு விசுவநாதன் வீட்டுக்குச் சென்ற சிபிசிஐடி போலீசார் அவரை தரதரவென இழுத்து கை கால்களில் காயம் ஏற்படும் அளவுக்கு பலவந்தமாக பலத்தைப் பிரயோகித்து அவர் மூக்கு கண்ணாடி எல்லாம் உடைத்து போட்டுவிட்டு அவரது உறவினர்களுக்கும் வழக்கறிஞருக்கும் முறைப்படி சட்டப்படி உச்சநீதிமன்ற விதிகளின்படி தகவல்களை சொல்லாமல் ஏதோ ஒரு விசாரணைக்கு கூட்டிச் செல்வதாக சொல்லி அதன் பிறகு முகிலன் மீது ராஜேஸ்வரி கொடுத்துள்ள பாலியல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து நள்ளிரவில் அவரை சிறைக்கு கொண்டு சென்றார்கள் என்றார்.
இந்த தகவலை தெரிந்த தமிழ் ஆர்வலர்கள் காவிரி பாதுகாப்பு இயக்க செயல்பாட்டாளர்கள் எல்லாம் ஒன்று திரண்டனர். அது தொடர்பாக செய்தியாளர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு செய்தி சேகரிக்கப்பட்டது. பின்பு அவரை திருச்சி சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் முயற்சித்தபோது ,மேற்படி விஸ்வநாதனின் வயதையும் அவருடைய உடல் நிலையையும் கருத்தில் கொண்டு கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி விஜய்கார்த்திக் அவர்கள் விஸ்வநாதனை கரூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் .