கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமும், சசிகலாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் முக்கிய குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறார். இவரது அண்ணன் தனபால், சமீபகாலமாக இந்த வழக்கில் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதனை ஏற்று இன்று கோவையில் உள்ள சி.பி..சி.ஐ.டி. அலுவலகத்தில் கனகராஜின் அண்ணன் தனபால் ஆஜரானார்.
இந்தநிலையில், ஆஜரான தனபாலிடம் எட்டு மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கனகராஜை அடித்துக் கொன்றுவிட்டு விபத்து எனக் காட்டியுள்ளனர் எனத் தெரிவித்த தனபால், சேலம், நீலகிரி, கோவை, திருப்பூரைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பட்டியலைச் சமர்ப்பித்தார். இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐம்பது பேர் ஏதேனும் ஒரு வகையில் கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் தனபால் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராக கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. வெளியே வந்த தனபால் விசாரணை நிறைவாக இருந்ததாகவும் மனதில் இருந்த பாரம் குறைந்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.