தமிழ்நாட்டில் கலாச்சார திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு தமிழக கிராமங்களில் ஆட்டம், பாட்டம், கூத்து, கொண்டாட்டம், கறி விருந்து தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆசியாவில் உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழாவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டத்திற்கும் சர்க்கஸ், கலை நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்தது.
அதேபோல தான் போன வாரம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய்க் கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 2 வாரம் முன்பு காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள், உட்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்தனர். வளர்த்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் கடந்த வாரம் ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித் திடலைச் சுற்றி ஒன்று சேர்ந்து கல்லணைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வே பாளை எடுப்புத் திருவிழா தான். மேற்பனைக்காடு கிராமத்தின் தங்கள் உறவுகளை எல்லாம் அழைத்து விருந்து உபசரிப்பு செய்த பிறகு, மாலையில் தங்கள் வீடுகளில் உள்ள குடங்களில் நெல்மணிகளை நிரப்பி அதில் பச்சை தென்னம்பாளைகளை உடைத்து வைத்து பூ சுற்றி அலங்காரம் செய்து குடியிருப்பு வாரியாக ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்துடன் மண்ணடித் திடலில் ஊரே ஒன்றாய் சேர்ந்து திடலை ஒரு சுற்று சுற்றி கால்வாய் கரையில் ஊர்வலமாக சென்று கால்வாய் கரையோரம் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலை சுற்றி வந்து பாளைகளை குளக்கரையில் போட்டுவிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
களைகட்டிய இந்த பாளை எடுப்பு திருவிழா கொண்டாட்டத்தில் பல கிராம மக்களும் ஆயிரக்கணக்கில் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.