தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பல முறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம், ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்திருந்தது.
மேலும் இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில், ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு எனக் கூற முடியாது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ‘தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்திலிருந்தும் மக்களைக் காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.