புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாபரமசிவம் (58). விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சட்டம் பயின்றார். அ.தி.மு.க மீதான பற்று அவரை நீதிமன்றத்தை விட கட்சி மேடைகளே அதிகம் அழைத்தது. அவரது துடிப்பான செயல்களைப் பார்த்து 1998- ம் ஆண்டு புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக்கினார் ஜெ. வெற்றியும் பெற்றார். அப்போது இளம் மா.செ மற்றும் எம்.பி.யாக இருந்தவர் ராஜாபரமசிவம் தான்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் அவருக்கான ஆதரவை திரும்ப பெற்ற நிலையில் ராஜா பரமசிவமும் கட்சிக்கு கட்டுப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பா.ஜ.க தரப்பில் பல்வேறு கட்டமாக அவரிடம் பேசியும் கட்சி தலைமைக்கு கட்டுப்படுவேன் என்றார். அதனால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு அ.தி.மு.க வில் இருந்தவர் அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார் கிடைக்கவில்லை. அதனால் சுயேட்சையாக களமிறங்கினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தி.மு.க பக்கம் சென்றவர் 2012 ல் புதுக்கோட்டை எம்.எல்.ஏ வாக இருந்த தோழர் முத்துக்குமரன் ( சொந்த ஊர் நெடுவாசல் )விபத்தில் இறந்த நேரத்தில் நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க வில் சீட் கேட்டார். அப்போது தி.மு.க தேர்தலை பறக்கணிப்பதாக அறிவித்தது. அதனால் முத்தரையர் சங்கத் தலைவர் குழ.செல்லையாவுடன் போயஸ் கார்டன் சென்று மீண்டும் அ.தி.மு.க வில் இணைந்தார்.
ஜெ. மரணத்திற்கு பிறகு ஒ.பி.எஸ்., தீபா அணிக்கு மாறினார். ஒ.பி.எஸ். அணி உருவான போது அவருடன் இருந்தவர்கள் அழைத்தாலும் செல்லவில்லை. தீபா ஆதரவாளராகவே இருந்தார்.
இவருக்கு சுசீலா என்ற மனைவியும். தனேந்திர்ராஜ் என்ற மகனும் காருண்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த மாதம் மகளுக்கு திருமணம் நடந்தது. பல ஆண்டுகளாக அரசியல், அரசியல் என்று சென்றவர் சில வருடங்களுக்கு முன்பு செம்பட்டிவிடுதியில் ஒரு பெட்ரோல் நிலையத்தை தொடங்கினார். தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய் கிழமை ( மே 14) சிகிச்சை பலனின்ற உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரானா நெடுவாசல் மேற்கு குருவாடி கிராமத்தில் நாளை புதன் கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. ராஜா பரமசிவம் இறந்த தகவல் அறிந்து கட்சி பாகுபாடின்றி அனுதாபம் தெரிவித்து வருகின்றனர். அனைவரிடமும் அன்பாக பழகுவார் என்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னை யார் என்றே அடையாளம் காட்டிக் கொள்ளாமல் கலந்து கொண்டார். நெடுவாசல் போராட்டத்தில் சொந்த ஊர் போராட்டம் என்று பல நாட்கள் கலந்து கொண்டு வழிநடத்தினார் என்கின்றனர்.