“கடைமடை வரை காவிரி நீர் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை…” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர், விவசாயிகள், இளைஞர்கள் என திருச்சியில் குவிந்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜீ பேரணியை ஆரம்பித்து வைக்க இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், விவசாயிகள், பெரியவர்கள் என கூட்டம் கூட்டமாக திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையிலிருந்து ஆரம்பித்த ஊர்வலத்தில் அனைவரும் மக்கள் அதிகாரம் கொடியை பிடித்து சென்றனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சரவணன், பாடகர் கோவன், அவரது குழுவினர் லதா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன், தோழர் ராஜா ஆகியோர் தலைமையிலான போராட்டக்காரர்கள், பறை இசை ஒலித்து, கம்பு சுற்றி திருச்சி மாநகரின் மையப்பகுதியில் கிட்ட தட்ட 2 மணி நேரமாக போராட்டகாரர்கள் பேரணியாக வந்து மத்திய தபால் நிலையத்தில் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.
சூட்டெரிக்கும் வெயிலில் கல்லூரி மாணவ மாணவிகள், சுடும் தரையில் அமர்ந்திருந்தனர். கூடியிருந்தவர்களிடம் பேசிய தோழர் ராஜீ காவிரி ஆணையம் உடனே அமைக்க சொல்லி தமிழக அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுங்கள். போராட்டத்திற்கு முக்கிய அம்சங்களாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷங்கள்…
குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே !
நர்மதா, கோதாவரி, கிருஷ்ணாவுக்கு தீர்ப்பு வந்தவுடன் ஆணையம் ! பதினோரு ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு ! சமத்துவம் இல்லாத தேசிய ஒருமைப்பாடு எதற்கு?
தமிழனா? இந்தியனா? முடிவு செய்வோம்! டெல்லியை நம்பி, நம்பி தமிழன் சாக வேண்டுமா? கருகிய பயிரால் விவசாயிகள் பலி! ஒக்கி புயலுக்கும், துப்பாக்கி சூட்டிற்கும் மீனவர்கள் பலி! நீட் தேர்வால் மாணவி அனிதா பலி! மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு டெல்டா விவசாயமே பலி !
கருவறையில் தமிழுக்கு தீட்டு ! நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லை! காவிரியில் இனி உனக்கு தண்ணீர் இல்லை ! ஏனென்றால் நீ… தமிழன்!
கர்நாடகத் தேர்தலுக்காக அரங்கேறும் வஞ்சகம் மட்டுமல்ல, காவிரித் தீர்ப்பு ! இது, திராவிட மரபு – தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கக்குகின்ற வெறுப்பு !
தமிழினத்தின் மீதான தாக்குதலை முறியடிக்க டெல்லிக்கு எதிராக தமிழகம் போர்க்களமாகட்டும்! ஜல்லிக்கட்டுக்கு திரண்ட தமிழகம், காவிரிக்கு வெடித்துக் கிளம்பட்டும்! என்ற கோஷங்களை எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர்.