தேனி மாவட்டத்தில் உள்ள துணைமுதல்வர் ஒபிஎஸ்சின் தொகுதியான போடியில் மதுபோதையில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை காக்கிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது கருப்பசாமி கோவில் தெரு. இந்த தெருவின் நுழைவாயிலில் இன்று மாலை வாகன சோதனையில், ஆனந்து என்ற ஏட்டு மற்றும் ஜெயராமன் என்ற இரண்டாம் நிலை காவலர், இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த தெருவில் இரண்டாவது வீட்டில் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர பொதுக்குழு உறுப்பினர் பிரபு தனது இருசக்கர வாகனத்தில் தெருவிற்குள் சென்றுகொண்டிருந்தார். அவரை சோதனை செய்ய முயன்ற போது வீடு அருகில் உள்ளது என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.
இதனால் டென்ஷன் அடைந்த ஏட்டு மற்றும் இரண்டாம் நிலை காவலர் இருவரும் தோழர் பிரபு வீட்டிற்கே சென்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் தோழருக்கும் காக்கிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதனை அருகில் இருந்த நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், பிரபுவை இரு காக்கிகளும் சரமாரியாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
கோபத்தின் உச்சிக்கு சென்ற ஒரு காக்கி தனது இடுப்பில் இருந்த போலீஸ் பெல்ட்டை கழட்டி அடிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. தாக்கிய இருவரில் ஒருவர் மது போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பிரபு நேர்மையான மனிதர். அவருக்கு காலில் பிரச்சனை உள்ளது. வீடுதேடி வந்து போலீசார் அடிக்கும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் சும்மா இருந்த பிரபுவை வேண்டும் என்றே போலீஸார் வீன் வம்புக்கு இழுத்து அடித்து இருப்பதை வண்மையாக கண்டிக்கிறோம் என்றனர் அப்பகுதியை சேர்ந்த மக்கள்.
இது சம்மந்தமாக காக்கிகள் வட்டாரத்தில் விசாரித்த போது.... டிடி எனப்படும் மதுபோதையில் வாகனத்தை இயக்கியவர்களை தினமும் பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இத்தனை பேர் என்று இலக்கு நிர்ணயித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவிட்டு இருக்கிறார். அதனால் தான் ரோட்டில் போகிறவர்களை எல்லாம் வாகன சோதனை என்று நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றனர்.
கடந்த வாரத்தில் கூட, போடி நகரத்தில் வார்டு ஒன்றிற்கு ஒரு காக்கி என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வார்டு காக்கி மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும் துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியிலையே காக்கிகள் அடாவடியில் ஈடுபட்டதை கண்டு தொகுதி மக்களே வாய்யடைத்து போய் விட்டனர்.