கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகேயுள்ள எஸ்.புதுக்குப்பம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர்(46), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது 40). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராஜசேகர் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வருவது வழக்கம். இந்த நிலையில், ராஜசேகர் வெளியூர் சென்றிருக்கும் போது ஜோதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ராஜசேகர் இல்லாதபோது ஜோதியும் மோகனும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ராஜசேகருக்கு நாளடைவில் இவர்களின் பழக்கம் தெரியவந்தது. அதையடுத்து ராஜசேகர் பலமுறை ஜோதியைக் கண்டித்துள்ளார். ஆனால், ஜோதி அதனை பொருட்படுத்தாமல் மோகனுடன் தனது உறவைத் தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜசேகர், 'மீண்டும் இதுபோன்று நடந்து கொண்டால் உனது வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிடுவேன். இனி திருந்தி நடந்து கொள்ளாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்' என்று கண்டித்துள்ளார். அதனையடுத்து இவர்கள் உறவுக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை 9 மாதத்திற்கு முன்பு ராஜசேகரன் மனைவி ஜோதி, மோகனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகில் இருந்த மீன் குட்டையின் ஓரத்தில் பள்ளம் தோண்டி யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர். அந்த இடத்தையும் யாருக்கும் தெரியாதது போல் சரி செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
குழந்தைகள், 'அப்பா எங்கே?' என்று கேட்கும் போதெல்லாம் ஜோதி அவர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுள்ளதாகக் கூறி வந்துள்ளார். இதேபோல் ஜோதியின் தம்பி சிவக்குமாரும், 'அக்கா, மாமா எப்போ வருவார்? எந்த ஊருக்கு வேலைக்குச் சென்றுள்ளார்? அவரது போன் நம்பரை கொடு. நான் பேசுகிறேன்' என அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினமும் இதேபோல் விடாப்பிடியாக கேட்டுள்ளார். ஒருகட்டத்தில் கடுப்பான ஜோதி, 'உனக்கு இனி மாமா மோகன்தான்' எனக் கோபமாகக் கூறினார். 'ஏன் இப்படி கூறுகிறாய்?, அப்போ எனது மாமா எங்கே, என்ன ஆனார் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஜோதி, 'உனது மாமாவை அடித்துக் கொலை செய்து மீன்குட்டை அருகே புதைத்து விட்டோம்' எனக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார் இதுகுறித்து ராஜசேகரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜசேகரன் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் துறையினர் ஜோதியைப் பிடித்து விசாரணை செய்தனர். தீவிர விசாரணையில் ராஜசேகரை தானும் மோகனும் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜோதியை போலீசார் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவான மோகனை தேடி வருகின்றனர்.