நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்தலில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2019 மற்றும் 2021 தேர்தல்களில் 61 சட்டமன்றத் தொகுதிகளில் 7.3 சதவீதம் முதல் 9.6 சதவீதம் வரை மக்கள் நீதி மய்யம் வாக்குகளை பெற்றிருந்தது. அதனடிப்படையில் மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் திமுக ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்பொழுது வரை திமுக மக்கள் நீதி மய்யம் இடையேயான பேச்சுவார்த்தை மறைமுகமாகவே நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விரைவில் திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே சுமுக உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது. கோவை, தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கேட்டு வருகிறது.
வரும் பிப்.28ஆம் தேதி திமுக-காங்கிரஸ் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், பிப்.28ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்.29ஆம் தேதி திரைப்பட படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் வெளிநாட்டிற்கு செல்கிறார். மார்ச் 10ஆம் தேதி தான் மீண்டும் தமிழகம் வருவார் என்ற நிலையில், திமுக - மக்கள் நீதி மய்யம் இறுதிப் பங்கீடு விரைவில் முடியும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.