Skip to main content

“கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும்..” - திருமாவளவன்

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

"We should start a" linguistic university "in the name of the Kalaignar." - Thirumavalavan
                                                    கோப்புப் படம்

 

 

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (07.08.2021) காலை கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். அதேபோல், பல்வேறு தலைவர்களும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞரை நினைவுகூரும் வகையில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதேபோல், விசிக தலைவர் தொல். திருமாவளவன், கலைஞர் நினைவுநாளில் கலைஞர் பெயரில் ‘மொழியியல் பல்கலைக்கழகம்’ ஒன்றைத் துவக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.  

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரில் தமிழ்நாட்டில் ‘மொழியியல் பல்கலைக்கழகம்’ ஒன்றைத் துவக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

 

தமிழ்நாட்டில் எத்தனையோ துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு, அவையாவும் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை.

 

உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழ்நாட்டில் பொருத்தமானதொரு இடத்தில், கலைஞரின் பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

 

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை (Moscow State Linguistic University) முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம்.

 

கலைஞர் அவர்களின் மூன்றாவது நினைவுநாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்