வேதியியல் ஆய்வகத்திலிருந்த வேதி உப்பை மாங்காயில் தொட்டுச் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பள்ளியில் பூட்டப்படாமல் இருந்த வேதியியல் ஆய்வகத்தில் மதிய உணவு இடைவேளையில் புகுந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளே புகுந்த மாணவர்களில் 11 மாணவர்கள் பார்ப்பதற்கு சாதாரண உப்பு போல் இருக்கக்கூடிய மெக்னீசியம் பாஸ்பேட்டையும், மிளகாய்த்தூள் போல் இருக்கக் கூடிய ஃபெரிக் குளோரைடையும் எடுத்து அதில் மாங்காய் துண்டுகளை தொட்டு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் 11 மாணவர்களும் மயக்கமடைந்த நிலையில் காவிரி பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில அரசுப் பள்ளிகளில் இதுபோன்று ஆய்வகங்கள் பூட்டப்படாமல் அவல நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.