Skip to main content

குறைந்த வட்டியில் கடன்; தொழிலதிபர்களிடம் நூதன முறையில் மோசடி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

borrow amount for low interest amount tirupur gang involved

 

புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் மத்திய படை அதிகாரி ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், "நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறீர்கள். அதற்கு நாங்கள் குறைந்த வட்டியில் கடன் தருகிறோம். ஒரு கோடி ரூபாய் கடன் வழங்க பெயர் இல்லாமல் தமிழ்நாடு பத்திரம் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி தர வேண்டும். நீங்கள் கடனைத் திருப்பி அடைத்தவுடன் உங்களுக்கு அந்த பத்திரத்தை தந்து விடுவோம். வேறு எந்த நிபந்தனையும் கிடையாது” என்று பேசி கடந்த மாதம் 25 ஆம் தேதி திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரவழைத்து அவரிடம் இருந்து 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த கும்பல் தலைமறைவானது. பின்னர் அவரால் அந்த கும்பலை தொடர்புகொள்ள முடியவில்லை.

 

இது குறித்து அந்த தொழிலதிபர் புதுச்சேரி சைபர் கிராம் போலீஸிடம் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது சம்பந்தமாக புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா மற்றும் விஷ்ணு ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர் சந்தோஷ், காவலர்கள் மணிமொழி, அருண், வினோத் உள்ளிட்டோர் தனிப்படை அமைத்து மேற்கண்ட குற்றவாளிகளை கடந்த ஒரு மாதமாக கண்காணித்து வந்தனர். மேற்படி மோசடிக்காரர்கள் பயன்படுத்திய அனைத்து செல்போன்களும் குற்றச்சம்பவத்தை முடித்துவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் விசாரணையில் மேற்கொண்டு முன்னேற்றம் ஏற்படவில்லை.

 

பல்வேறு சைபர் பிரிவு மற்றும் தொழில்நுட்பங்கள் ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணிக்கையில் அனைவரும் திருப்பூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இந்த மோசடி கும்பலில் மூன்று பேரை நேற்று முன்தினம் இரவு சேலத்தில் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், திருப்பூர் காளிபாளையம் ஊராட்சி குருவாயூரப்பன் நகரில் வசிக்கும் செல்வராசு என்பவர் இந்த மோசடி கும்பலுக்கு தலைவராக இருந்து செயல்பட்டு வருவது தெரியவந்தது. மேலும், அந்த மோசடி கும்பலில் 10க்கும் மேற்பட்டோர் செல்வராஜிடம் வேலை செய்ததும் அதில் செல்வராஜின் மனைவி சுமதி மற்றும் செல்வராஜ் மகள் சுகப்பிரியா, திருப்பூர் வாவிப்பாளையம் இளங்கோவன், திருப்பூர் நெருப்பெரிச்சல் சுந்தரமூர்த்தி, திருப்பூரில் கறிக்கடை வைத்திருக்கும் வேலம்பாளையம் ஜோதி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

 

அவர்களில் ஒருவர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக வருகின்ற விளம்பரங்களை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, “உங்களுக்கு குறைந்த வட்டியில் லோன் ஏற்பாடு செய்து தருகிறோம்” என்று பேச, குறைந்த வட்டி என்பதால் தொழிலதிபர்களும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் அவரை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் வேறு ஒரு நபரைக் காட்டி இனிமேல் இவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று அதன் பிறகு அவரிடம் தொடர்பு கொள்ள மாட்டார்.

 

இரண்டாவது நபர் கடன் கேட்டு தொடர்பு கொள்ளுபவரிடம் வீடு அல்லது அவருடைய இடத்தின் பத்திரத்தை கேட்டு அவர்கள் நம்புவது போல் அனைத்து விதமான ஆவணங்களையும் கேட்டு சரி பார்ப்பார். பத்திரம் லீகல் ஒப்பினியன் மற்றும் அனைத்து ஆவணங்களையும் கேட்பார். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு, “இனிமேல் கடன் கொடுக்கும் எங்களுடைய பாஸ் தான் உங்களிடம் பேசுவார்” என்று வேறு ஒருவரை பேச வைப்பார். 

 

மூன்றாவதாக வருகின்ற நபர் எவ்வளவு தொகையை உங்களுக்கு தர முடியும் என்று பேசி முடிவு எடுத்துவிட்டு வேறு எந்த ஆவணங்களோ கமிஷனோ எங்களுக்கு வேண்டாம். தமிழ்நாடு அரசின் பத்திரம் பெயர் போடாமல் உங்களுக்கு கொடுக்கின்ற கடன் தொகையில் 10% எங்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் வாங்கிக் கொடுத்த அடுத்த இரண்டாவது நாள் உங்களுக்கு நாங்கள் சொன்ன தொகையை தந்து விடுவோம் என்றும், மேலும் பணம் தயாராக இருப்பது போன்ற வீடியோக்களையும் அனுப்புவார்கள்.

 

அதை நம்பி வருபவர்களை வேறு மாவட்டங்களுக்கு கோர்ட் அல்லது ரிஜிஸ்டர் ஆபீசுக்கு அழைத்து அவர்கள் அங்கு வந்தவுடன் அவர்களே தயார் செய்து வைத்திருந்த வேறு இரண்டு நபர்கள் ஒரு நபரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரை மணி நேரம் கழித்து இவர்கள் பார்க்கும்படியாக 25 ஆயிரம் ரூபாய் பத்திரங்கள் 20 அல்லது 30 கொடுப்பார்கள். அவர்கள் பத்திரத்தை வாங்கிச் சென்ற உடனே இங்கு பணம் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் நபர்களிடம் உங்கள் பணத்தை கொடுங்கள். இன்னொரு அரை மணி நேரத்தில் உங்களுக்கு டாக்குமெண்ட்டை கொடுக்கிறோம் என்று வேறு இரண்டு நபர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்று  சிறிது காலதாமதம் ஆன பிறகு பணத்தைக் கொடுத்தவர் போனில் தொடர்பு கொள்ளும் போது நெட்வொர்க் ஸ்லோவாக இருக்கிறது. இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று சொல்லி அந்த இடத்தை விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விடுவார்கள்.

 

இப்படி அவர்கள் ஏமாற்ற வரும்போது மூன்று அல்லது நான்கு குழுக்களாகப் பிரிந்து இருந்து பணம் கொடுக்க வருபவர்களை கண்காணிக்கின்றனர். பணத்தை பெற்றவுடன் உடனடியாக அனைவரும் அங்கிருந்து அவர்கள் எங்கு குறிப்பிடுகிறார்களோ அங்கு அல்லது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மோசடி மன்னன் செல்வராஜ் வைத்திருக்கும் செட் ஒன்றுக்கு சென்று, அன்று அவர்கள் ஏமாற்றிய தொகைக்கு ஈடாக 10 ஆயிரம் ரூபாய் முதல் 50,000 வரை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு மீதம் இருக்கின்ற பணத்தை செல்வராஜ் எடுத்துச் சென்றுவிடுவார். இது முடிந்தவுடன் அனைவரும் அவரவருடைய செல்போனை, சிம் கார்டுகளை செல்வராஜ் வசம் ஒப்படைப்பார்கள். அவர் அதை வைத்துக் கொள்வார். அந்த செல் நம்பர் அதோடு வேலை செய்யாது. பணத்தை கொடுத்தவர்கள் செல்போன் நம்பரை தவிர வேறு எந்த ஆதாரங்களும் அவர்களிடம் இல்லாததால் பணத்தை கொடுத்த இடம் வேறு மாவட்டமாகவும் இருப்பதால் ஏதும் செய்வது அறியாமல் திரும்பச் சென்று விடுகிறார்கள்.

 

இதுபோல் காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருச்சி, கரூர், பெங்களூர், கேரளா ஆகிய பல்வேறு நகரங்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு நபர்களை இந்த கும்பல் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மோசடி கும்பலை சேர்ந்த ஒரு பெண் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை புதுச்சேரி போலீசார் தேடி வருகின்றார்கள். இதுவரை இவர்கள் மேல் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளது  அல்லது விசாரணையில் உள்ளது என்ற விவரங்களையும் தமிழக போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணை செய்து வருகின்றார்கள். குறிப்பிட்ட மோசடி கும்பல் தலைவன் தலைமறைவாக இருக்கின்ற நிலையில், அவருடன் மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்