Skip to main content

"சட்ட மேலவை கொண்டு வரும் முயற்சியைக் கைவிட வேண்டும்" - கமல்ஹாசன் கோரிக்கை!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

"We must abandon the attempt to bring the rule of law" - Kamal Haasan demand!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (06/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருந்தனக்காரர்களும், ஜமீன்தார்களும் பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்ட கவுரவ அமைப்பே 'சட்ட மேலவை' யின் மூல வடிவம். விடுதலைக்குப் பின் ஜனநாயகம் மலர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றம் உருவான பிறகு, இந்த அவையின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. இன்று இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கிறது. 

 

ஒருகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, ம.பொ.சி., கலைஞர், எம்.ஜி.ஆர். என்று பல ஆளுமைகள் மேலவையில் இடம்பெற்றிருந்தனர். செறிவான பல விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் அரசியல் தலையீடுகளால் இந்த அவை தன் மாண்பை இழந்தது. கட்சிகள் தங்களுக்கு வேண்டியவர்களைத் திருப்தி செய்வதற்காக மேலவைப் பதவிகளைப் பயன்படுத்திக்கொண்டன. திவால் நோட்டீஸ் கொடுத்த ஒருவரை மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததால், சர்ச்சை வெடித்தது. அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்தார்.

 

திமுக ஆட்சிக்கு வரும் சமயத்திலெல்லாம் மேலவையைக் கொண்டுவரும் முயற்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் அடுத்து வரும் அதிமுக அந்த முயற்சியை முறியடிப்பதும் தொடர் நிகழ்வு. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத் தொடரில் மீண்டும் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வரவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.  

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளின் சட்டமன்றம் இருக்கிறது. தமிழக அரசுக்கு வழிகாட்ட பல்வேறு ஆலோசனைக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 'சட்ட மேலவை' என்பது தேவையில்லாத ஒன்று.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட இதர வசதிகள் இந்த மேலவை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அமைச்சராகும் வாய்ப்பும் உருவாகும். புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களைப் புகுத்தி ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்தது போன்ற முயற்சிகளைத் தமிழகத்தில் எக்காலத்திலும் எந்த வடிவிலும் அனுமதிக்கக் கூடாது. 

 

ஒருபக்கம் முந்தைய அதிமுக அரசு கஜானாவைக் காலி செய்து வைத்திருப்பதால் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் காலாவதியாகிப் போன சட்ட மேலவையை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. கரோனா பெருந்தொற்றினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநிலம் தத்தளிக்கும் சூழலில், இந்த கவுரவப் பதவிகள் தேவையற்றவை. 

 

காலத்திற்கு ஒவ்வாத இந்த மேலவை எனும் அமைப்பை இந்தியாவின் பல மாநிலங்கள் ரத்து செய்துவிட்டன. மக்கள் வாழ்வில் எந்த ஏற்றத்தையும் மாற்றத்தையும் உருவாக்காத, அதே சமயத்தில் செலவீனம் பிடித்த இந்த அவையால் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் யாதொரு பயனில்லை. 

 

தங்களுக்கு சட்டமன்றத்தில் இருக்கும் பலத்தை வைத்து திமுக 'சட்ட மேலவை' என்னும் ஏற்பாட்டை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால் மாநிலம் இன்றிருக்கும் சூழலில் இது தேவையற்றது என்பதை ஆள்வோருக்கும் மக்களுக்கும் சொல்ல வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. 

 

'சட்ட மேலவை' மீண்டும் கொண்டு வரும் திட்டம் தமிழக அரசுக்கு இருக்குமானால், இன்றைய அரசியல், பொருளாதார சூழல்களை மனதிற்கொண்டு இந்த முயற்சியைக் கைவிடும்படி தமிழ்நாடு முதலமைச்சரை மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்