Skip to main content

எஸ்.வி.சேகரை கட்சிப் பணியில் இருந்தும், பொறுப்புகளிலிருந்தும் ஒதுக்கி வைத்துள்ளோம்: தமிழிசை

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
sv tam


எஸ்.வி.சேகரை கட்சிப்பணியில் இருந்தும், சில பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்கிவைத்துள்ளோம் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவரிடம், எஸ்.வி.சேகரை இன்னமும் தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எஸ்.வி.சேகரை கட்சி பணியில் இருந்தும், சில பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்கிவைத்துள்ளோம். எஸ்.வி.சேகர் விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும்.

 

 

தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டு கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதிதிட்டம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது.

நீட் தேர்வை பொறுத்தவரை அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் மொத்தம் 4 ஆயிரம் மருத்துவ சீட்டுகள் தான் உள்ளன. இதில் சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் அதை எதிர்க்கட்சிகள் முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிது படுத்துவது வேதனை அளிக்கிறது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தன் கடமையை செய்யும். சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தொடர்ச்சியாக பெருநகரங்களில் சங்கிலி பறிப்பு தொடர் கதையாக உள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்