Skip to main content

“3 முக்கியமான சின்னங்களை மதுரையில் ஏற்படுத்தியிருக்கிறோம்...” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
"We have established 3 important symbols in Madurai" - Chief Minister M.K. Stalin

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24.01.2023) திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் நம்முடைய திமுக அரசால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதுவும், கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற ஆண்டில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டு பெருமை கொண்ட நம்முடைய தமிழினம் கொண்டாடும் ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை.

"We have established 3 important symbols in Madurai" - Chief Minister M.K. Stalin

திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக, மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை இந்த மதுரையில் ஏற்படுத்தியிருக்கிறோம். ஒன்று, தமிழினத்தினுடைய பழமையை சொல்கின்ற கீழடி அருங்காட்சியகம் மதுரைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, கலைஞரின் பெயரால் மாபெரும் நூலகம் பிரமாண்டமாக மதுரை மாநகரில் அறிவு மாளிகையாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது மூன்றாவதாக, இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூரில் இதை சொல்லுகின்ற நேரத்தில், 2015 ஆம் ஆண்டு அறிவித்து, இன்றைக்கு வரைக்கும் மதுரைக்கு மத்தியில் இருக்கக்கூடிய மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறதே அது உங்கள் ஞாபகத்திற்கு வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்