நமது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மக்கள் பணிக்காகவே தங்களை அர்பணித்தவர்கள்...(?) அப்படிப்பட்டவர்கள் அமர்ந்து பணியாற்ற ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அலுவலகம், சென்னையில் தங்குவதற்கு ஒரு விடுதியும்உண்டு. இது தவிரமாதம் ஒன்னரை லட்சம் சம்பளம், படிகள், சலுகைகள் என ஏராளம் உண்டு என்பதும் கூடிக் கொண்டே போகிறது இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இப்போது என்ன புதிதாக 17 கோடி அது தானே விஷயம்.
இதோ செய்தி,
தமிழக சட்டமன்றத்தின் அவை குழு கூட்டம் இன்று சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சட்டமன்ற அவை குழு தலைவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை தாங்கினார். பிறகு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தென்னரசு கூறும்போது,
நமது சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு விடுதியில் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அறையில் 8 லிப்ட்டுகள் 4 பிளாக்குகளில் அமைக்க ரூபாய் 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலும், 240 சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளுக்கு ரூபாய் 2.74 கோடி மதிப்பில் ஆர்.ஓ.வாட்டர் எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் அமைக்கும் பணியும், அடுத்து 1 கோடியே 5 லட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் வளாகத்தில் பேவர் பிளாக் அமைக்கவும், ரூபாய் 3 கோடியே 75 லட்சத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தும் வேலையும், 4 கோடியே 50 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்கவும் ஒரு கோடி மதிப்பில் விருந்தினர்கள் வந்தால் சோபா செட்டுகள், சாப்பாட்டு மேஜைகள், நாற்காலிகள் ,டேபிள்கள் புதிதாக அமைக்கும் பணி என மொத்தம் 17 கோடி மதிப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு விடுதிகளிலும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தவிர தமிழ்நாட்டில் 174 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகம் ரூ.11 கோடியே 60 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் வசதிக்கு ஏற்பவாறு கட்டவும் ,சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலக வளாகத்தில் அவர்கள் அறைகளுக்கு ரூ .5 கோடி மதிப்பில் வண்ணங்கள் பூசவும் நிதி ஒதுக்க இந்தக் குழுவால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் தென்னரசு.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் பெயின்ட் அடிக்க டேபிள், சேர்வாங்க ஏறக்குறைய 34 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவையும் சொன்ன எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோட்டில் உள்ள தனது தொகுதி அலுவலகத்திற்கு இந்த நான்கு வருடத்தில் ஒரு நாள் கூட செல்லவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள். காரணம் அந்த அலுவலகத்திற்கு வாஸ்து சரியில்லை என்றும் ராசியில்லையெனவும் கூறுகிறாராம். தென்னரசு எம்.எல்.ஏ.அலுவலகமாக ஈரோட்டில் பயன்படுத்துவது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காளிங்கராயன் விருந்தினர் விடுதியைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.