கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ''ஆண்டுக்கு ஒருமுறை வரக்கூடிய கிறிஸ்மஸ் விழாவிலே நான் கலந்து கொண்டுள்ளேன். இது ஆண்டாண்டு தான் வர வேண்டுமா அடிக்கடி வரக்கூடாதா என்ற ஏக்கம் கூட எனக்கு வருவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விழாவாக இந்த விழா அமைந்து கொண்டிருக்கிறது. இங்கு எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள் இதை ஒரு மதத்தின் விழாவாக நாம் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து மதத்திற்கும் நல்லிணக்கமாக நடைபெறக்கூடிய விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறோம்.
திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்கக் கூடியவர்களுக்கு, மதத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டி அதில் லாபம் பெறலாம் என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதிரான அரசுதான் இன்று உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதநேயத்தை வளர்ப்பதுதான் திராவிடத்தினுடைய கொள்கை. தந்தை பெரியாரோடு குன்றக்குடி அடிகளார் இணைந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவோடும் நம்முடைய கலைஞரோடும், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து நின்றார். அண்மையில் நாம் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த பேராசிரியர் வள்ளலார் விழாக்களில் பங்கேற்று ஆற்றக்கூடிய உரைகளை யாரும் மறக்க முடியாது.
ஏன் அன்று முதல் இன்று வரை பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் எங்களோடு மேடைகளைப் பகிர்ந்து கொள்வார். ஒவ்வொருவரும் அவரவர்களுடைய கடவுள்களை வணங்கக் கூடியவர்கள் தான். அடுத்தவரின் நம்பிக்கையை மதிப்பவர்கள்தான். அதேபோல் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது திருமூலர் வாக்கு. அதைத்தான் திமுகவின் பார்வையாக அண்ணா முன்வைத்து சமத்துவ சமுதாயத்திற்கான சகோதரத்துவ உணர்வை வளர்த்து சமூக நீதிப் பாதையிலே பயணிக்கச் செய்தார். திமுகவை பொறுத்தவரை 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுவோம்' என்ற தத்துவத்தை எடுத்து வைத்த அண்ணாவின் வழியை ஊன்றி இன்று திராவிட மாடல் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இயேசுநாதராக இருந்தாலும், அண்ணல் முகமது நபியாக இருந்தாலும், அருள்பிரகாச வள்ளலாராக இருந்தாலும் ஏழையின் பசியைப் போக்கிட வேண்டும்; அவர்களின் துன்பங்களைக் கலைந்திட வேண்டும் என்பதே அருள்நெறியாக முன் வைத்தார்கள். சமய மார்க்கங்கள் சொன்னதை அரசியல் இயக்கமாக வழிநடத்தி வெற்றிகரமாக அதனைச் செயல்படுத்தி வரக்கூடிய ஆட்சிதான் உங்கள் ஆட்சி. ஒரு துளி கண்ணீர் ஏழையின் கண்ணிலிருந்து வெளிப்பட்டாலும் அதைத் துடைக்கக் கூடிய கைகளாகத் திராவிட மாடல் அரசின் கை இருக்கும்'' என்றார்.