Skip to main content

'ஒரு மணி நேரத்தில் சாம்பல் தருகிறோம்...' - இருப்பிடம் நோக்கி வரும் 'நடமாடும் மயானம்'

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

'We deliver ashes in an hour...'- 'Walking Cemetery' coming towards location

 

கிராமம் முதல் நகரம் வரை இன்றளவும் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அல்லது எரியூட்ட சுடுகாடு பிரச்சனை என்பது தொடர்ந்து நீடித்தே வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற போராட்டமும் தொடரத்தான் செய்கிறது. எங்கள் ஊரில் சுடுகாடே இல்லையென்றும், மயானத்திற்கு இறந்தவர் உடலைக் கொண்டு செல்ல வழியே இல்லை என்றும், செத்தும் கூட நிம்மதி இல்லங்க என பல்வேறு அமைப்பினர் போராடுவதும் தொடர்கிறது.

 

இந்த விஞ்ஞான உலகம் எல்லாவற்றிற்கும் வழிவகை செய்து அதற்கான கண்டுபிடிப்புகளையும் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான ஒரு செயல்பாடுதான் இறந்தவர் உடலை எரியூட்ட இருப்பிடம் நோக்கி வருகிற நடமாடும் எரியூட்டும் தகன வாகனம். தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா 14 ந் தேதி மாலை ஈரோட்டில் நடந்தது. இந்நிகழ்வில் 'ஆத்மா அறக்கட்டளை' நிர்வாகிகள் வி.ராஜமாணிக்கம், சகாதேவன், இளங்குமரன், அக்னி ஸ்டீல் தங்கவேல், செங்குந்தர் பள்ளி சிவானந்தம், ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை துவக்கி வைத்தனர்.

 

இதுகுறித்து ஆத்மா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, 'ஈரோடு போன்ற நகரங்களில் மின் மயானம் உள்ளது. அதுபோல கிராமங்களிலும் மின் மயானத்தின் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தியுள்ளோம். கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலைத் தகனம் செய்ய ரூபாய் 15 ஆயிரம் வரை செலவாகும். அது மட்டுமல்லாது உடலைத் தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் அல்லது ஒருநாள் தேவைப்படுகிறது.

 

'We deliver ashes in an hour...'- 'Walking Cemetery' coming towards location

 

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என பலரும் வெளியூர்களில் பல்வேறு வேலைகளில் உள்ளார்கள். இயந்திரத்தனமாக இந்த காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் எல்லோரும் பழைய வழக்கங்களை மாற்றி வருகிறார்கள். அதில் முக்கியமானது இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பது போய் இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்ற நிலை வந்துவிட்டது.

 

அதற்கு ஏதுவாகத்தான் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம். இதன் மூலம் இறந்தவர் உடலை எரியூட்டி ஒரு மணி நேரத்தில் அவரின் குடும்பத்தினரிடம்  அஸ்தி (சாம்பல்) வழங்கப்படும். நடமாடும் எரியூட்டும் தகன வாகனம், ஈரோடு ஆத்மா அறக்கட்டளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி குறிப்பிட்ட ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். முழுக்க முழுக்க இவை கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும். இந்த வாகனம் ஈரோடு மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி எரியூட்டப்படும். இந்த வாகனத்தின் சேவையைப் பெற கட்டணமாக நாங்கள் ரூபாய் 500 செலுத்த வேண்டுமென நிர்ணயித்துள்ளோம். இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை முறைப்படி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்யும் நபர்கள் கட்டாயம் உடல் அடக்கத்திற்குத் தேவையான உறுதிமொழி படிவம், அடையாள அட்டை, தேவையான ஆவணங்கள் வழங்க வேண்டும்" என்றனர்.

 

உயிர் உருவாகி உயிர்ப்பித்து 60, 70, 90 என ஆண்டுக்கணக்கில்  வாழும் மனித உடல் இறப்புக்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் சாம்பலாகி இறந்த நாளே பால் ஊற்றும் நிலை வந்துவிட்டது மனிதர்களே...!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.