மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்பொழுது நிறைவடைந்தது. இன்று காலை முதல் தொடங்கிய ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் விஜய் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே அதிக காளைகளை பிடித்தவர் என்ற சாதனையை விஜய் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 17 காளைகள் பிடித்து தொடர்ந்து இரண்டாம் பரிசை வென்றார். மதுரை விளாங்குடியை சேர்ந்த மாடுபிடி வீரர் பாலாஜி 14 காளைகளைப் பிடித்து மூன்றாவது பரிசை பெற்றார்.
முதல் பரிசு பெற்ற விஜய்க்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. மொத்தம் நடைபெற்ற 11 சுற்றுகளில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மொத்தம் 61 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பிடித்த விஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஆன்லைன் முறை எங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கவில்லை. கடைசி வரை எனக்கு டோக்கன் கிடைக்கவே இல்லை. கடைசி நேரத்தில் விளாங்குடி சித்தன் என்பவர் மூலமாகதான் எங்களுக்கு டோக்கன் கிடைத்தது. இரண்டு முறை சிறந்த பரிசு வாங்கியுள்ளான் இவனுக்கு டோக்கன் வரவில்லை என்று வாங்கி கொடுத்தார். கமிட்டி மூலமாக டோக்கன் கொடுத்தால் அவரவர்கள் திறமையை காட்டி வாங்கி மாடு பிடிப்போம். ஆனால் இந்த ஆன்லைன் முறையில் யாரு யார் யாரோ வாங்குகிறார்கள். இ சேவை மையத்திற்கு போனால் 200 ரூபாய் கேட்கிறார்கள். படிக்காதவர்கள் எல்லாம் என்ன செய்ய முடியும். முதலமைச்சர் பரிசாக அளிக்கக்கூடிய காரை பார்த்தேன். இப்பொழுதுதான் என் வாழ்விலேயே முதன்முதலாக காரின் பக்கத்தில் போக இருக்கிறேன். மிக மிக சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
ஜல்லிக்கட்டில் சிறப்பாக களமாடிய காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசு மதுரையை சேர்ந்த காமேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசாக வாஷிங் மெஷின் வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் காளைக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.