'காலையில் மது குடிப்பவர்களைக் குடிகாரர்கள் எனச் சொல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''தயவுசெய்து நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் குறை சொல்வதற்காக சொல்லவில்லை. ஆனால் காலையில் குடிப்பவர்களைப் பற்றி குடிகாரன் என்று யாராவது சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. மாலையில் அது வேற விஷயம். காலையில் கடுமையான வேலைக்குப் போகக் கூடியவர்கள் தவிர்க்க முடியாமல் அதை அருந்துகிறார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமா கூடாதா? வீட்டை விட்டு வெளியில் வருகிறோம். சாக்கடை அடைத்துக்கொண்டு துர்நாற்றம் வந்தால் உடனே உள்ளே போய் விடுகிறோம். அதை கிளீன் செய்வதற்கு யார் வருகிறார்கள்? அப்படிப்பட்டவர்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள். மாற்று வழி என்ன என்று கண்டுபிடியுங்கள். இதுதான் எனக்கு இருக்கின்ற வருத்தம்.
உடனடியாக 7 மணிக்கு கடையை திறக்கப் போறாங்க என்கிறார்கள். அந்த ஐடியாவே கிடையாது. திரும்பத் திரும்ப நாங்கள் சொல்கிறோம். டாஸ்மாக் மூலமாக பெரிய வருமானத்தை ஈட்ட வேண்டும்; அதை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை. டாஸ்மாக்கில் வாங்குவதற்கு பதிலாக இல்லீகளாக எங்காவது போய் வாங்கி தப்பு நடந்து விடக்கூடாது. அதற்கு எப்படி செக் வைக்கலாம் என்றுதான் டாஸ்மாக் உள்ளது.
இந்த மாதம் என்ன வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் அது குறைகிறது. ஏன் குறைகிறது? என்பது பணம் ஏன் வராமல் போய்விட்டது எனக் கேட்பதற்கு அல்ல. தவறான இடத்திற்கு போய்விடக்கூடாது. அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அதை சரி செய்ய வேண்டும். நாங்கள் சர்வே எடுத்தோம். ஏறத்தாழ 100க்கு 40 பேர் கடைக்கு முன்னால் சராசரியாக அரை மணி நேரம் இன்னொரு நண்பருக்காக காத்திருக்கிறார். அவர்களிடத்தில் கேட்கிறார்கள் 'காலையில் குடிப்பதற்கு வச்சிருந்து குடிக்கலாமே' என கேட்டால் 'எங்களுடைய குடும்பம் அப்படி' என சொல்கிறார்கள். பெரிய பணக்காரங்க வாங்கிட்டு போனா யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை. தனி அறை இருக்கும், தனி செல்ஃப் இருக்கும் ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் பத்துக்கு பத்து அடிதான் எங்க வீடு என்கிறார்கள். ஜாலிக்காக குடிப்பவர்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம். இதற்கு என்ன மாற்று வழி என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும். எங்கள் மனதில் இதெல்லாம் காயமாகப்பட்டிருக்கிறது. எனவே அவர்களை எல்லாம் சரி செய்து அழைத்து வரவேண்டும்.'' என்றார்.