
அரசு கேபிள் டி.வி. சந்தாதாரர்களைத் தனியார் சந்தாதாரர்களாக மாற்ற முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 140 ரூபாய், அதற்கான 18 சதவீத ஜி.எஸ்.டி வரியைச் சேர்த்து 165 ரூபாய்க்கு 200க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்கிவருகிறது. ஒளிபரப்பிற்காக கேபிள் டிவி செட்டாப் பாக்சை இலவசமாக வழங்கிவருகிறது.
அரசு செட்டாப் பாக்சால் பயனடைந்துவரும் சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல், சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தங்களின் சுயலாபத்திற்கு வேண்டி தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அரசு செட்டாப் பாக்சை மாற்றிவருவதாக தகவல்கள் வருகின்றன. அப்படி அரசு செட்டாப் பாக்சை மாற்றினாலோ, அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களைத் தனியார் சந்தாதாரர்களாக மாற்ற முயன்றாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.