முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், 7 பேர் விடுதலை தொடர்பான முடிவை நீதிமன்றம் எடுக்கமுடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அது ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. ஆனால் இது குறித்து ஆளுநர் முடிவெடுக்காதிருந்த நிலையில், அது மீண்டும் இந்திய குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரன் 20 ஆண்டுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக்கோரி உய்ரநீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 7ஆண்டுகள்,10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் எனச் சிறையில் இருப்பவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் நிலையில், அரசியல் தலையீடு காரணமாக சிறையிலே இருக்கிறேன். இவ்வாறு தொடர்ச்சியாக சிறையில் இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் ஆளுநர் முடிவெடுக்காத நிலை உள்ளது எனவே விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 7 பேர் விடுதலை தொடர்பான மனு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். ஆகவே இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் முடிவுக்காகவே காத்திருக்கிறோம் எனத் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குச் சென்றுள்ளதால், இது குறித்து நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது எனத் தெரிவித்து வழக்கை இரண்டு வாரம் ஒத்திவைத்தனர்.