”போலீஸார் தனிப்பட்ட பயணமாக பேருந்தில் செல்லும்போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் எடுத்துச் செல்லும்போது மட்டுமே டிக்கெட் தேவையில்லை” என டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கீழ் மட்டத்தில் இருக்கும் போலீஸாரிடம் சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சீர்திருத்தத்தை முதலில் மேல் மட்டத்தில் இருந்து கொண்டு வாருங்கள். அரசு வாகனங்களை சொந்த பணிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதை உயரதிகாரிகள் உணருங்கள். நாங்கள் டிக்கெட் எடுக்கத் தயார். வேண்டுமானால் ஒவ்வொரு போலீஸாரிடமும் மாதம் ரூ.10 பிடித்தம் செய்தால், மொத்தம் ரூ.10 லட்சம் கிடைக்கும். இதைப் போக்குவரத்துத் துறைக்குக் கொடுத்து விட்டால், அவர்களுக்கும் நட்டம் ஏற்படப்போவதில்லை. இப்படி புதிதாகச் சிந்தியுங்கள்’ என டி.ஜி.பி.க்கே அறிவுரை சொல்லி வாட்ஸ் அப் குரூப்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் போலீஸார் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.