Skip to main content

டெல்லியில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி!

Published on 20/12/2020 | Edited on 20/12/2020
INCIDENT IN ERODE

 

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாயச் சங்கங்கள் சார்பில் சுடரேந்தி நினைவஞ்சலில் செலுத்தும் நிகழ்ச்சி 20-ந் தேதி ஈரோட்டில் நடைபெற்றது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிட வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்தப் போராட்டத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலைப் பகுதியில் நடைபெற்றது. திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், இஸ்லாமிய மற்றும் பல்வேறு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும், விவசாயச் சங்கத்தினர்களும் கலந்து கொண்டனர். 

 

நிகழ்ச்சியின் போது திமுக மாநில துணைப்ப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சுடரை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் தங்களது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலியைச் செலுத்தினர். பின்னர் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் விரைவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்திடும் வகையிலான போராட்டங்களை எதிர்க்கட்சியினர் விவசாயச் சங்கங்களின் உதவியுடன் மேற்கொள்வார்கள் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் அழித்திட நினைக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  

 

நிகழ்ச்சியில் அகிலஇந்திய விசாயிகள் போராட்டஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ஏ.எம்.முனுசாமி, கி.வே.பொன்னையன், சி.எம்.துளசிமணி, காங்கிரஸ்கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி, மாநகர மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இரகுஇராமன், சி.பி.ஐ மாநகரச செயலாளர் பிரபாகரன், கொமதேக.மாவட்ட்டத் தலைவர் கோவிந்தராஜ், திமுக தெற்கு மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஆர்.பி.சண்முகம், திராவிடர்கழக நிருவாகிசண்முகம், பேராசிரியர் காளிமுத்து உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்