மணல் கடத்தல் என்பது லாரியில், ஆரம்பித்து தற்போது மினிடோர், ஆட்டோ, டூவிலர் ரேஞ்சுக்கு இறங்கியிருந்தாலும் இதன் பணத்தின் மதிப்பு மட்டும் குறையவே இல்லை. இதனால் மணல் கடத்தல் என்பது திருச்சி மாவட்டம் முழுவதும் கனஜோர நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் இணையத்தில் உயிருக்கு பயந்து கலெக்டரிடம் கெஞ்சிய ஆர்.ஐ. என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டுயிருந்தோம்.
திருவரம்பூர் பகுதியில் அதிகமாக மணல் கடத்தல் இருப்பதாகவும், இது குறித்து திருவரம்பூர் காவல்நிலையத்திற்கு தொடர் புகார் வந்த வண்ணம் இருந்தாலும் திருவரம்பூர் இன்ஸ்பெக்டர் மதன் என்பவர் இதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றும், அதே நேரத்தில் தொடர்ந்து மணல் கொள்ளைகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் வருவாய் அலுவலகர்களுக்கு தொடர் மிரட்டல் இருக்கிறது என்றும். காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று இதற்காக கலெக்டரிடம் புகார் செய்தது குறித்து எழுதியிருந்தோம்.
இதே போல திருச்சி மேற்கு தொகுதி ஆர்.ஐ. மணல் லாரியை தடுத்த போது மணல் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு உள்ளானதையும் பதிவு செய்து இருந்தோம்.
இந்த நிலையில் திருவரம்பூர் வருவாய் அலுவலர்கள் தற்போது அதிரடியாக களத்தில் இறங்கி திருவெறும்பூர் அருகே மணல் கடத்தி வந்த 9 மொபட்டு, 2 லாரி, 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து திருவரம்பூர் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளனர்.
திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இந்நிலையில் அதிகாலையில் திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர் யோகராஜா மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
திருவெறும்பூர் அருகே புத்தாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி ஆற்றில் மணல் அள்ளி மூட்டையாக கட்டி மொபட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது. இவ்வாறு மணலை கடத்தி வந்த 9 மொபட்டுகளை பறிமுதல் செய்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மறைவான இடத்தில் லாரியை நிறுத்தி கொண்டு அருகில் உள்ள காவிரி ஆற்று மணலை சாக்கு மூட்டைகளில் அள்ளி, அதனை தலை சுமையாக சுமந்து வந்து லாரியில் ஏற்றி கடத்தப்படுவதாக புகார் வந்தது.
இதனையடுத்து இரவு திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மணலை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த முஸ்தபா , சுப்பிரமணி, செந்தில்குமார், மூர்த்தி, காத்தான், ஆகிய 5 பேரையும் பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
இதே போல் மணிகண்டம் அருகே உள்ள துரைக்குடி, கொளுக்கட்டைக்குடி, கோலார்பட்டி ஆகிய ஊர்களை ஒட்டியுள்ள கோரையாற்றுப்பகுதியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம் தலைமையிலான வருவாய்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துரைக்குடியில் இருந்து நாகமங்கலத்திற்கு சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் கோரையாற்றுப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்து மேல்நடவடிக்கைக் காக ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதேபோல ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை அருகே மணல் அள்ளி கடத்திச்சென்ற 8 மாட்டு வண்டிகளை தாசில்தார் கனகமாணிக்கம் பறிமுதல் செய்து மேல்நடவடிக்கைக்காக தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
திருச்சி மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளையர்கள் அரசு வருவாய் அதிகாரிகளுக்கு வரும் தொடர் அச்சுருத்தலுக்கு நடுவிலும் பயப்படாமல் அதிரடியாக திருச்சி மாநகர் முழுவதும் வருவாய் அலுவலர்கள் எதை பற்றி கவலைப்படாமல் களத்தில் இறங்கி மணல் கொள்ளையர்களை கைது செய்து வருவது பொதுமக்களிடையே பெரிய ஆச்சரியத்தையும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.