திருச்சி மாவட்டம், உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், “திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, வேலாயுதங்குடி கிராமத்தில் வக்ஃப் வாரியம் சார்பில், இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் மேம்பாட்டுக்காக கடந்த 1975ஆம் ஆண்டு சுமார் 7 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலம் தொடர்பான தவறான தகவல்களை ஒத்தை கோபுரம் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த பைசல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த அப்துல்ஹக்கீம், பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா ஆகியோர் கடந்த 13ம் தேதி தொலைக்காட்சியில் தவறான தகவவைகூறியுள்ளனர்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். அந்த 7 ஏக்கர் நிலத்தை மேம்படுத்தி அதில் வரும் வருவாயை திருச்சியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்து வழங்கப்பட்டது. அந்த நிலத்தை விற்பனை செய்ய இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்திற்கு அதிகாரம் இல்லை. அந்த நிலத்தில் பள்ளி வாசல், மதகுருமார்கள் தங்குவதற்கான இல்லம், ஆதரவற்றோர் இல்லம், மருத்துவமனை மற்றும் ஏழை முஸ்லிம் மக்களுக்கு தரை வாடகைக்கு வீட்டு மனைகள் ஏற்படுத்துவதற்கு வக்ஃப் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். இதுதான் உண்மை. சிலர் தவறான வகையில் தொலைக்காட்சியில் செய்திகளை கொடுத்து குழப்பம் விளைவித்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம். மேலும் இது குறித்து வக்ஃபு நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது இஸ்லாமிய கழகத்தின் நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.