என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி என்எல்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 'பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் என்.எல்.சியால் காத்திருக்க முடியாதா? எனக் கேள்வி எழுப்பியதோடு, நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு அதிருப்தி தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் தொழிலாளர் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி தண்டபாணி, 'நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியைப் பார்க்கும் பொழுது கண்ணீர் வந்தது. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனப் பாடிய வள்ளலார் ஊரிலேயே பயிர்கள் அழிக்கப்படுகிறது. நிலக்கரி பயன்படாது. என்.எல்.சி. கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை இதுதான் என் கருத்து'' என்றார்.
என்.எல்.சி. தரப்பில், நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிக இழப்பீடு கொடுக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, தற்போது சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்' என்றனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, 'நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தைச் சந்திக்கப் போகிறோம். அரிசி, காய்கறிக்கு அடித்துக் கொள்ளும் தலைமுறையை நாம் பார்க்கத்தான் போகிறோம். பூமியைத் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என எடுத்துக்கொண்டு இருந்தால் அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கை வைத்தால் தமிழகத்துக்குக் கிடைக்கும் மழை சுத்தமாக நின்று விடும். என்.எல்.சி நிறுவனம் மற்றும் பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.