நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டம் நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக சார்பாக‘நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தைத் தஞ்சை மத்திய தபால் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “ஆளுநருக்கு சட்டமன்றத்தில் இருந்து தீர்மானம் செல்கிறது என்றால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் அவரின் பணி. நீட் தேர்வை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்றால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்துதான் போராடுகிறோம். பொதுநலம் சார்ந்து இந்த அறப்போராட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். மத்திய அரசாங்கத்தோடு இணக்கமாக இருந்தாலும் நீட் தேர்வு எதிர்ப்பு போன்ற பொதுநலத்திற்காக ஒரே ஒருமுறையேனும் மத்திய அரசாங்கத்தை மாணவர்களின் பக்கம் நின்று கேள்வி கேளுங்கள்” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திமுக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திமுக மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை மாநகர செயலாளர், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி ஆகியோரும் அணி அமைப்பாளர்களும் கலந்துகொண்டார்கள்.