கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலேசியவில் உள்ள பினாங்கு மாநிலம் கெடா தீவில் நடந்த உலக சாம்பியன் சிலம்பாட்டப் போட்டியில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். பல நாட்டு வீரர்களும் அந்தந்த நாட்டு அரசாங்க செலவில் வந்து கலந்துகொண்ட நிலையில் இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிலும் தமிழ்நாட்டில் இருந்து 80 வீரர் வீராங்கனைகள் அங்கே இங்கே கடன் வாங்கி நல்ல உள்ளங்களின் உதவியோடவும் போய் கலந்து கொண்டு அடுத்தடுத்து சிலம்பம், வாள் வீச்சு என்று தங்கம் வெள்ளிப் பதக்கங்களை வாங்கி குவித்து உலக சிலம்ப சாம்பியன் இந்தியா என்று தேசிய கொடியை உயர்த்திப் பிடித்து முகம் மலர்ந்தனர். ஆனால் இவர்களுக்கு இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசாங்கமும் என்ன செய்தது என்பது தான் கேள்விக்குறி..
இந்த 80 பேரில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி என்னும் சின்ன கிராமத்தில் டீ கடை நடத்தி வரும் தன் தாய், தந்தை, உறவினர்கள் ஆங்காங்கே கடன் வாங்கி வீரமணிகண்டன் என்ற இளைஞரை அனுப்பி வைத்தனர். சீனியர் பிரிவில் ஒற்றை வாள் வீச்சில் தங்கமும் குழு போட்டியில் வெள்ளி என இருபதங்கங்களையும் வென்று தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தார்.
அந்த இளைஞர் சொந்த ஊருக்கு வந்தபோது தாய் தந்தையுடன் உறவினர்களும் மகிழ்ந்தனர். நம்ம ஊரு புள்ள நாட்டுக்கே பெருமை தேடி தந்துட்டேய்யா என்று கொண்டாடினார்கள்.
வீரமணிகண்டன் நம்மிடம்.. நான் நமது தற்காப்பு கலையை கல்லூரியில் போய் தான் கத்துக்க தொடங்கினேன். எனக்கு தனியார் கல்லூரி நிர்வாகமும் பயிற்சியாளரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அடுத்தடுத்து மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வாங்கி பயிற்சியாளருக்கான பட்டயத்தையும் வாங்கினேன். இப்ப உலக போட்டியிலும் வெற்றி பெற்றேன். ஆனா ஒரு அரசு வேலை தான் கிடைக்கல. நான் இப்ப பயிற்சியாளரா பலருக்கு பயிற்சி கொடுத்தாலும் தற்காப்புக் கலையான சிலம்பத்தையும் ஒலிம்பிக்ல சேர்த்தால் தான் செலவுகளையும் ஏற்கும் அரசு நல்ல வேலையும் கொடுக்கும் என்றார்.
கிராமத்தினரோ.. எங்க ஊரு புள்ள உலகப் போட்டிக்கு போறான்னு தெரிஞ்சதும் மகிழ்ச்சியடைஞ்சோம். ஊரெல்லாம் கடன் வாங்கி அனுப்புனாங்க. நாங்க நினைச்ச மாதிரி வெற்றி பெற்று இந்த நாட்டுக்கும் எங்க ஊருக்கும் பெருமை தேடி தந்துட்டான். ஆனா இந்த அரசாங்கங்கள் தான் இன்னும் இது போல ஜெயிச்சு வரும் புள்ளைகளை கண்டுக்கிறதே இல்ல. இவ்வளவு உழைச்சு ஜெயிச்சு வந்த வீரர்களுக்கு அரசாங்கம் ஒரு வேலையும், ஊக்கத் தொகையும் கொடுத்தால் நல்லாா இருக்குமே என்றனர்.
அரசாங்கம் நினைத்தால் வேலையும் கொடுக்கலாம் ஊக்கப்பரிசும் கொடுக்கலாம். இடைத்தேர்தல் முடிந்த பிறகாவது அரசாங்கம் நல்ல பதில் சொல்லும் என்று எதிர்பார்ப்போம்.