கஜா புயல் தமிழகத்தை மிரட்டி வருகிறது. கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்பதால் அதற்கு உட்பட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ஆபத்தான பதாகைகள் காற்றின் வேகத்தில் சாயும் போது விபத்துகள் ஏற்படும் என்று அந்த பதாகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை வைத்தவர்களே அகற்ற வேண்டும் என்று காவல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விளம்பரம் செய்யப்பட்டது. அதனால் பலரும் தானாக முன்வந்து பதாகைகளை அகற்றிக் கொண்டனர். அகற்றப்படாமல் இருந்த பதாகைகளை இன்று காவல் துறை பாதுகாப்புடன் பேரூராட்சி அலுவலர்கள் அகற்றினார்கள். இதனால் ஆலங்குடி பகுதியில் பதாகையால் பாதிப்புகள் ஏற்படுவது குறையலாம். இதேபோல தமிழகம் முழுவதும் கஜா செல்லும் வழியில் உள்ள நகரங்களில் பதாகைகள் அகற்றப்பட்டால் பெரும் ஆபத்துகளை தடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.
மேலும் புதுக்கோட்டை நகரில் பொதுமக்களை அச்சுருத்தி வந்த பாழடைந்த இம்பாலா ஹோட்டல் கட்டிடத்திற்கு நகராட்சி சார்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீனவர்களும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் வந்தால் பாதுகாப்பது மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.