ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் இன்று திரண்டு வந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- ஒப்பந்ததாரர் ஈரோடு வடிவேலு என்பவர் ஈரோடு மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்து பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மாநகராட்சியில் கட்டிடம் கட்டுவதற்கு முறைப்படி ஒப்பந்தம் எடுத்து தற்போது மாமரத்து பாளையம் ஆசிரியர் காலனியில் குப்பைகளை பிரித்து எடுக்கும் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பணி நடக்கும் இடத்தில் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று பேர் வந்து ஒப்பந்ததாரர் வடிவேலு மற்றும் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இங்கு நீங்கள் பணி செய்யக் கூடாது என்றும் அவர்கள் மிரட்டினார்கள். எங்களிடம் எதுவும் பேச வேண்டாம் அதிகாரியிடம் பேசுங்கள் என்று கூறியதற்கு அந்த மூன்று பேர் கும்பல் ஒப்பந்ததாரர் வடிவேலு மாநகராட்சி ஊழியர் சிவானந்தம் மற்றும்
கோபிநாத்தையும் கீழே தள்ளி, அடித்து தகாத வார்த்தையால் சொல்லி தாக்கினர். மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த கும்பலால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தோம். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த கும்பலுக்கு அமைச்சர் கருப்பனன் ஆதரவு உள்ளதாக தெரிகிறது. ஆகவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.