வருடந்தோறும் தென்மேற்குப் பருவக் காற்றின் விளைவாய் கேரளப் பகுதிகளில் அடைமழை இருக்கும். அதன் தாக்கம் தென்மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருப்பதோடு, குறிப்பாக, தென்காசியின் பக்கமுள்ள அருவிகளின் நகரமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இதமான காற்று வீசுவதோடு மலையில் சாரல் மழையும் பொழியும். அதன் விளைவாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அருவியாய் கொட்டும். இந்த மூன்று மாதங்களிலும் அருவியில் குளியல் போடவும், சீசனை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவது வழக்கம்.
தற்போது ஆகஸ்ட் மாதத்தில் சீசன் முடிந்து இறுதி கட்டத்தையடைந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் நேற்று முதல் குற்றால மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர் சாரல் மழை காரணமாகக் குற்றாலத்தில் உள்ள புலியருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி ஆகியவைகளில் தண்ணீர் கொட்டுகிறது. அதே சமயம் ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாகவே விழுகிறது. அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் நன்றாக விழுந்தபோதும், லாக்டவுன் காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாதவாறு போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.