சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் 14 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பில் அகமது ஜியாவுதீன் என்பவர் தனது மனைவியுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். குடியிருப்பின் தரைத்தளத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி ஆவார்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பணம் கொடுத்து லாரிகளில் குடிநீர் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் குடியிருப்புக்கு வந்த தண்ணீரை தரைதளத்தில் வசிக்கும் முன்னாள் டிஎஸ்பி ராமசாமி வீட்டு உபயோகத்திற்கு மட்டும் இன்றி தான் வளர்க்கும் செடி கொடிகளுக்கு இன்னபிற தேவையற்ற தேவைகளுக்கும் செலவு செய்து வீணாக்கியதாக கூறப்படுகிறது.
இதை முதல் தளத்தில் வசிக்கும் ஜியாவுதீன் தட்டி கேட்டதோடு செல்போனிலும் படம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் டிஎஸ்பி ராமசாமி ஜியாவுதீனிடமிருந்து செல்போனை பறித்ததோடு கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கேட்ட ஜியாவுதீனின் மனைவி நஸ்ரினையும் தகாத வார்த்தைகளால் வசைபாடி உள்ளார். இதன்பிறகும் ஆத்திரம் அடங்காத ராமசாமி ஜியாவுதீனை தாக்கும் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஜியாவுதீன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், முன்தினம் இரவு ஒரு லாரி தண்ணீர், 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை 12 நிமிடத்தில் காலி செய்துவிட்டார்கள். வேண்டுமென்றே நீரை அலட்சியமாக ஓபன் பண்ணி விட்டார்கள். ஏன் இந்த மாதிரி பண்ணினார்கள் எல்லாரும் சேர்ந்து கேட்டதற்கு தப்பா நாங்கள் பேசினோம் என்று சொல்லி அலிகேசன் உருவாக்கி என்னை அடி அடி என்று அடித்துள்ளார் என்றார்.
இதுகுறித்து ஜியாவுதீன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதன் பேரில் முன்னாள் டிஎஸ்பி ராமசாமி, அவரது மருமகன் பிரபாகரன் ஆகியோர் மீது தாக்குதல் மற்றும் பெண் வன்கொடுமை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராமசாமி மற்றும் அவரது மருமகன் பிரபாகரனைப் பிடித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.