இன்று தை அமாவாசை, பொதுவாக அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் பலரும் தங்களது முன்னோர்கள் மறைந்த பெற்றோர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில், ஆற்றங்கரையில் குளித்து முன்னோர்களுக்கு திதி வழங்கி பூஜைகள் செய்வது வழக்கம். இதில் கூடுதலாக தை அமாவாசையன்று பெரும்பாலான மக்கள் ஆற்றங்கரையோரம் வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் பூஜைகள் செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறையில் பல மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வந்து ஆற்றில் குளித்து பூஜை செய்து திதி வழங்கி செல்வார்கள். இந்த கூடுதுறை பவானி மற்றும் காவிரி ஆறு இரண்டும் கலக்கும் பகுதியாகும் ஆகவே இது சிறப்பு வாய்ந்த இடம் என்பதால் மக்கள் இங்கு அதிக அளவில் வருவார்கள்.
இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் வந்து காவிரி ஆற்றில் குளித்து பூஜைகள் செய்தனர். அதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு, கொடுமுடி காவிரி ஆறு, போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.