பருவமழை தொடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கி தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடர் கனமழையாக பெய்து வருவதால் வரத்து வாரிகள் சரியாக இருந்த பகுதிகளில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது. பல ஊர்களில் வரத்து வாரிகள் இல்லாமல் தண்ணீர் வீணாகி வருகிறது.
அதிகமான குளங்களை கொண்ட புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து குளங்களும் சில நாட்களுக்கு முன்பே நிரம்பிவிட்டதால், தற்போது பெய்யும் மழைத் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரை ஒட்டிய பகுதிகளில் குளங்களில் உடைப்புகளும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல அறந்தாங்கி பகுதியில் ஒரு பாலம் உடைந்து நற்பவளக்குடி- தாஞ்சூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆவூர் கிராமத்தில் ஏரி உடைப்பெடுத்துள்ளது. மேலும் தொடர் கனமழை அறிவிப்புகள் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி வருகிறது.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (18/11/2021) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.