ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி - ஈரோடு சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக கோபி காளியண்ணன் தெருவைச் சேர்ந்த அங்கமுத்து(36) என்பவர் பணியாற்றி வந்தார்.
அங்கமுத்து கடந்த வருடம் அவருக்குத் தெரிந்த 10 நபர்களை வரவழைத்து தனக்குக் குடும்ப கஷ்டம் இருப்பதாகவும் அதனால் பணம் தேவைப்படுவதாகவும், என்னிடம் தனித்தனியாக நகைகள் உள்ளன. எனது பெயரில் வங்கியில் வைக்க முடியாது. எனவே உங்கள் கணக்கில் நகைகளை வைத்துப் பணத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார். அதன்படி அந்த பத்து பேரும் அங்கமுத்துவிடம் நகைகளை வாங்கி அதனை மீண்டும் வங்கியில் அடமானம் வைப்பதுபோல் வைத்துப் பணத்தை வாங்கி அவரிடமே கொடுத்துள்ளனர்.
நகை மதிப்பீட்டாளராக இருந்த அங்கமுத்து, அந்த நகைகளை அவர்கள் பெயரில் கணக்கு வைத்துப் பணத்தையும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் அங்கமுத்து கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை உடம்பு சரி இல்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகத்தினர் நகைகளை ஆய்வு செய்தபோது, 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது, எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் அங்கமுத்துதான் நகைகளைக் கொடுத்து அடமானம் வைத்துப் பணம் பெற்றுக் கொண்டார் என்றும் கூறினர். அங்கமுத்து ரூ. 41 லட்சத்து 80 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனை அடுத்து வங்கியின் துணை மேலாளர் இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அங்கமுத்துவைத் தேடி வந்தனர். இந்நிலையில் அங்கமுத்துவை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மதிப்பீட்டாளர், போலி நகைகளை வைத்துப் பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.