கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் உள்ள அப்துல் கலாம் ஆசாத் வீதி, புதுப்பேட்டை, பங்களா வீதி உள்ளிட்ட மூன்று தெருக்களில் சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கினால் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதிக்குக் குடிநீர் வரவில்லை என்றும், இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி காலிக் குடங்களுடன் தெருக்களில் அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களைக் கண்டுகொள்ளாத நகராட்சியைக் கண்டித்தும், நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்வதற்கு மட்டும் காலதாமதம் பார்க்காமல் வருகின்ற நிலையில், ஒரு மாத காலமாக குடிநீர் பற்றாக்குறை பற்றி தகவல் அளித்தும், கண்டுகொள்ளாததைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.
இதேபோல் 15- ஆவது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர், பெரியார் நகர் மற்றும் ஏனாதிமேடு பகுதிகளில் கடந்த மூன்று மாதமாகச் சரியான நேரத்தில், முறையாகக் குடிநீர் வழங்கவில்லை என்றும், நேற்று வழங்கப்பட்ட குடிநீர் சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசியதாகவும் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கைகளை மனுவாக சார் ஆட்சியர் பிரவீன்குமாரிடம் அளித்தனர். சார் ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.