தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், 14 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. களியல், மாறபாடி, திருவட்டார், மாத்தூர், சிதறல், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றன. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நெல்லையில் கனமழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. 125.79 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 131.30 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.