தண்ணீர் திறக்கப்பட்டு பதினைந்து நாட்களை கடந்தும், மேட்டூர் அணை இரண்டாவது முறை நிரம்பிய நிலையிலும் பெரும்பாலான ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் தண்ணீர் வரவில்லை. திறக்கப்படும் தண்ணீர் தேவையில்லாமல் கடலில் கலக்கிறது, என பல்வேறு இடங்களில் பொதுமக்களும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களான பந்தல்லூர்,திருமங்கைச்சேரி உள்ளிட்ட சில ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பந்தநல்லூர் கடைவீதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இரண்டுமணி நேரம் பஸ்போக்குவரத்து தடைபட்டது. அங்கு அதிகாரிகளும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், பிறகு பந்தநல்லூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இர்சாத் கூறுகையில், " தண்ணீர் திறக்கப்பட்டு பதினைந்து நாட்களை தாண்டிவிட்டது, ஆனால் இன்றுவரை எங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை, ஏற்கனவே கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரட்சியில் இருந்து இன்னும் எங்கள் பகுதி மீளவில்லை, தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. குடிதண்ணீருக்காக பல மைல் தூரம் போகவேண்டியிருக்கு, இந்த ஆண்டு தண்ணீர் நிரம்ப இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் குளங்கள், நீர்நிலைகளில் நிரம்பாமல் கடலுக்கு போகுது. இரண்டுமுறை மேட்டூர் நிரம்பிடுச்சி. அவ்வளவு தண்ணீரும் கடலுக்கு போகுது, போராடி வாங்கிய தண்ணீரை அதிமுக அரசு அலட்சியமாக கடலுக்கு திறந்துவிடுறாங்க." என்றார் ஆதங்கமாக.
போராட்டத்தில் உள்ளவர்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உத்தரவாதம் கொடுத்தப்பிறகே போராட்டத்தை கைவிட்டனர்.