நேற்று சேலம் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்குப் பேருந்து நிலையத்தைத் தமிழக முதல்வர் தற்போது திறந்து வைத்தார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்டா குறுவை பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை என மொத்தம் 220 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும்.
இந்நிலையில் இன்று ஜூன் 12 ஆம் தேதி, மேட்டூர் அணையில் நீர்ப்பாசனத்திற்காகத் தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார். இதற்காக மேட்டூர் நோக்கி தமிழக முதல்வர் சாலை மார்க்கமாகப் பயணத்தைத் தொடங்கினார். வழிநெடுக மக்கள் மற்றும் திமுகவினர் வரவேற்பளித்தனர். அதேபோல் ஆங்காங்கே கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வர் பெற்றுக் கொண்டார். பின்னர் மேட்டூர் அணைப் பகுதிக்கு வந்தடைந்த முதல்வருக்கு வரவேற்பளிக்கப்பட்ட நிலையில் நீரைத் திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.41 அடியிலிருந்து 103.35 கன அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு 69.25 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மின்நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 10,000 கன அடி வரை நீர் திறப்பு அதிகரிக்கப்படும். 90வது முறையாக மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.