தண்ணீரில்லாமல் தஞ்சை, நாகை, திருவாரூர், மாவட்ட விளை நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நடவு பயிர்கள் முற்றிலும் பாளம் பாளமாக வெடித்துகருகுவதால் தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வந்த டெல்டா மாவட்டங்கள் சமீப காலமாகவே அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சம்பா, குருவை, தாளடி, என முப்போகம் விளைந்த டெல்டா மாவட்டங்கள் எட்டு ஆண்டுகளாக ஒரு போக சாகுபடிக்கே அல்லல்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை அதிகமாக இருக்கும் என்றும், மேட்டூர் அதன் கொள்ளளவை எட்டிவிட்ட நிலையிலும் விவசாயிகள் ஆர்வமாக சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை, மிகவும் தாமதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது, அதேநேரத்தில் குடிமராமத்து பணிகளையும், தூர்வாரும் பணிகளையும் முடுக்கிவிட்டது தமிழக அரசு. இப்படி பல்வேறு தடைகளையும் தாண்டி கடைமடைக்கு மிகவும் தாமதமாக காவிரி தண்ணீர் வந்தடைந்தது. அதை நம்பி திருவாரூர், நாகை, தஞ்சை, மாவட்ட விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆறுகளில் தண்ணீர் இல்லாமலும், மழை இல்லாமலும், விதைப்பு செய்யப்பட்ட, நடவு செய்யப்பட்ட நிலங்கள் முழுவதும் காய்ந்து பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது, மூன்று மாவட்டங்களிலும் சுமார் பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் தண்ணீரின்றி கருகி கொண்டிருக்கிறது. உடனடியாக பொதுப்பணித்துறையும், தமிழக அரசும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.
இது குறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில்," கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து கர்நாடகத்திலும், தமிழகத்திலும் மழை பெய்தது. இந்த தண்ணீரை தேக்கி வைக்க கூட வசதி இல்லாத நிலைக்கு நமது அரசு இருந்து வருகிறது. நீர் மேலாண்மையை உலகுக்கு பறைசாற்றியவர்கள் நம் முன்னோர்கள், ஆனால் இன்று கிடைத்த நீரை கடலுக்கு கச்சிதமாக கொண்டு சேர்க்கும் வேலையில் தான் நமது ஆளும் அரசு கவனமாக இருக்கிறது. இதை மாற்றிக் கொள்ள வேண்டும், தண்ணீரை சேமிக்க வழிவகை செய்யவேண்டும்," என்கிறார்கள்.