கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக ஞாயிறன்று கும்பகோணம் அருகே கீழணையிலிருந்து தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டார்.
தண்ணீரை வடவாறு வழியாக வினாடிக்கு 1800 கன அடியும், வடக்கு ராஜன் வாய்காலில் வினாடிக்கு 400 கனஅடியும்,தெற்கு ராஜனில் 400 கன அடி எனவும் மொத்தம் வினாடிக்கு 2ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் மூன்று மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திற்கு நேரடிப் பாசனமாக கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால் உள்ளிட்ட வாய்கால்கள் வழியாக பாசனத்திற்கு 47 ஆயிரத்து 97 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் வாய்கால், மேல இராமன் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் வழியாக நேரடிப் பாசனத்திற்கு 39 ஆயிரத்து 50 ஏக்கர் பாசனபரப்பு பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டத்திற்கும் 87 ஆயிரத்து 47 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் என்று கூறபடுகிறது.
இதன் தொடர்ச்சியாக வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு ராதா மதகு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 10 கனஅடியும் வீராணம் ஏரியில் உள்ள இதர 33 மதகுகள் வழியாக 390 கனஅடியும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி வட்டங்களில் 102 கிராமங்களிலுள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயத் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பது மாற்றி அமைக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) விஜயா, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், சிதம்பரம் கொள்ளிடம் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அன்பரசு, உதவி செயற்பொறியாளர் அருணகிரி, குமார் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், தமழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி மூர்த்தி, விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ், ராதா வாய்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகி உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் கூறுகையில் தற்போது காலம் கடந்து தண்ணீர் திறந்துள்ளார்கள் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கு பலனை தராது, ஆறுகளில் அதிக தண்ணீர் செல்லும் போது விவசாய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்திருந்தால் அது கடைமடை வரை வேகமாக அடித்துச் சென்றுஇருக்கும். தற்போது தண்ணீர் வேகம் குறைந்துள்ள நிலையில் திறந்து விட்டுள்ளார். கடைமடை வரையுள்ள பாசன வாய்க்கால்கள் தூர்வாரவில்லை. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை கொண்டு விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான அடியுரம் உள்ளிட்ட விவசாய பொருட்களை உடனே வழங்க வேண்டும். விவசாய கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.