சென்னை திருமுல்லைவாயலில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கிய நாம் தமிழர் கட்சியினரை புரட்சிபாரதம் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இலவச குடிநீர் வழங்க மூன்று நாட்களுக்கு முன்பு முன் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் விதித்திருக்கும் வினோத கட்டுப்பாட்டுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற இந்த சூழலில் லாரிகளில் கொண்டு வந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தெருத்தெருவாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் குடிநீர் லாரிகளில் நீரை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருமுல்லைவாயிலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அங்குள்ள மக்களுக்கு குடிநீர் இலவசமாக குடிநீர் வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பொறித்த பனியன்களை அணிந்து கொண்டு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக குடிநீரை வினியோகித்தது வந்தனர். ஏராளமான பெண்கள் குடங்களுடன் வந்து தண்ணீர் எடுத்துச் சென்றனர். இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பலராமன் என்பவர் இலவசமாக குடிநீர் வழங்குவதை தடுத்து நிறுத்தினார்.
கட்சி சார்பில் வழங்கப்படுவதால்தானே தடுக்கிறீர்கள் எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் அணிந்து இருந்த நாம் தமிழர் சின்னம் பொறித்த பனியனை கழட்டிவிட்டு குடிநீர் விநியோகிக்க அனுமதிக்குமாறும் கேட்டனர். ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. முன்னாள் கவுன்சிலர் பலராமன் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலீஸ் அனுமதி இல்லாமல் எப்படி தண்ணீர் வினியோகிக்கலாம் என்று கேள்வி கேட்டு தண்ணீர் லாரியை பறிமுதல் செய்ததோடு நாம் தமிழர் கட்சியினரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதற்கு அங்குள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்நிலையத்தில் வைத்து குடிநீர் லாரிக்கு அனுமதி உள்ளதா, குடிநீர் தரமாக உள்ளதா, எங்கிருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டது என்பது எல்லாம் விசாரித்து விட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என்றால் 3 நாட்களுக்கு முன்பாக தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகு அந்த பகுதியில் மீண்டும் குடிநீர் வழங்கியதாகவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.