நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்திவந்த 'டி23' புலியை 21வது நாளாக வனத்துறையினர் தேடிவருகிற நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட 'டி23' புலி தப்பித்துள்ளது. முன்னதாக 'டி23' இறந்திருக்கலாம் எனக் கருதிய வனத்துறை, உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலியை வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளில் தேடினர். 8 நாட்களுக்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்காணிக்க வைக்கப்பட்ட இமேஜ் ட்ராப் கேமராவில் அதிகாலை 3 மணிக்கு 'டி23' புலியின் உருவம் பதிவாகியது. இதனால் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது வனத்துறை.
இந்நிலையில் நேற்று (14.10.2021) இரவு மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதான வாகனத்தைச் சிலர் சரி செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகப் புலி ஒன்று சாலையைக் கடப்பதைப் பார்த்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இரவு 10 மணியளவில் வனத்துறையினரின் மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகும் புலி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மசினகுடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புலி பதுங்கிய அடர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காலை சுமார் 2 மணிவரை இந்த தேடுதல் வேட்டை நடந்தும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதில் விதிமுறை மீறல் இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாலை 6 மணிக்கு மேல் புலிக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்ற விதி இருக்கிறது. அதனை மீறி இரவு 10 மணிக்கு வனத்துறை மயக்க ஊசி செலுத்தியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.
மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வுடன் காணப்படும். இதனால் ஊர்மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.