
2019ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க ஆதரவுடன் பாமகவைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றிய சேர்மனாகவும், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜான்சிமேரி துணை சேர்மனாகவும் இருந்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட தி.மு.க கவுன்சிலர் முத்துக்கண்ணு தலைமையில், ஒன்றிய சேர்மன் மற்றும் துணை சேர்மன் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூறி விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் 15 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மனுவினை அளித்திருந்தனர். அந்த மனுவில் பா.ம.க மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் இருவர் கையெழுத்து போடவில்லை என கூறி புகார் அளித்தனர். அதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்கள் 13 பேர் மீண்டும் கோட்டாட்சியரிடம் நம்பிக்கையில்லா தீர்மான மனுவை அளித்தனர். அதன்பேரில் ஒன்றியத்திற்குட்பட்ட கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்ட விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் மூலம், நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான ரகசிய வாக்கெடுப்பில், நல்லூர் ஒன்றியத்திலுள்ள 21 ஒன்றிய கவுன்சிலர்களில், 13 ஒன்றிய கவுன்சிலர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். மீதமுள்ள அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேர், பா.ம.க கவுன்சிலர்கள் 2 பேர், ஒரு சுயேட்சை கவுன்சிலர் என எட்டு பேர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதேசமயம் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 13 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

ஆனால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 212(13)ன் படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது 4/5 பங்கு உறுப்பினர்கள், அதாவது 21 உறுப்பினர்களில் 17 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டால் மட்டுமே அந்த வாக்கெடுப்பு செல்லும் என சட்ட விதிமுறைகள் உள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லுமா? தீர்மானம் வெற்றி பெற்றதா? என்று குழப்ப நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் சென்றார்.
இதனிடையே நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ளாத அ.தி.மு.கவின் 5 கவுன்சிலர்கள், 2 பா.ம.க கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை கவுன்சிலர் என 8 கவுன்சிலர்களும் நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், 'கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாததால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது மட்டுமன்றி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செல்வி ஆடியபாதம், "நல்லூர் ஒன்றிய பகுதியில் கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை. தற்போது ஆட்சி மாற்றத்தால் தி.மு.கவை சேர்ந்த தனிநபர் ஒருவர் பதவி ஆசைக்காக வளர்ச்சிப் பணிகளை தடுத்து வருகிறார். இதுதவிர ஒன்றிய குழு தலைவர் மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை இல்லாததால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. அதனால் இனியாவது வளர்ச்சிப் பணிகளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.