தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (20/03/2020) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு நாமே இங்கு கூட்டமாக அமர்ந்திருக்கிறோம். ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். வீட்டில் வந்து என்னைப் பார்க்க வேண்டாம் என மூத்த அமைச்சர் ஒருவர் போர்டு வைத்து விட்டார்" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும். சட்டப்பேரவை தொடர்ந்து நடந்தால் தான் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க முடியும். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கத் தான் சட்டப்பேரவை கூடுகிறது" என்றார்.
அதன் பிறகு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் "தமிழகத்தில் ரூபாய் 9.66 கோடியில் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூபாய் 60 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 307 கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூபாய் 27 கோடி மதிப்பில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும். 189 அம்மா சிறப்பு அங்காடிகள் கூடுதலாகத் தொடங்கப்படும்" உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.