தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரை குடித்த 25க்கும் அதிகமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட அந்த பகுதியே நடுங்கிக்கிடக்கிறது.
தஞ்சாவூர் தொல்காப்பியர் நகரில் உள்ள நான்கு மற்றும் ஐந்தாம் தெருவில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த குடியிருப்புகளுக்கு மாநகராட்சியே குடிநீர் வழங்கி வருகிறது. அந்த தண்ணீர் சில நாள்களாகக் கலங்கலாக, சாக்கடை கலந்த நிலையில் வந்திருக்கிறது. இதுகுறித்து அப்பகுதியினர் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் மாநகராட்சி ஊழியர்களோ கரோனா பணிகளை காரணம் காட்டி அலட்சியபடுத்திவிட்டனர்.
அதன் விளைவு இன்று சனிக்கிழமை காலை தெருவில் உள்ள குழாயடியில் வழக்கம்போல அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து குடிநீருக்கு பயன்படுத்திய 16 பெண்கள் உட்பட 25 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் அந்த ஏரியாவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மகர்நோன்புசாவடி தாய் சேய் நல விடுதியில் சிகிச்சைக்காக அனுப்பினர், அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரப் பிரிவினர் முகாம் அமைத்து, அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "புதிதாக பாதாளசாக்கடை இணைப்பு வழங்கும்போது குடிநீர் குழாயை சேதப்படுத்திட்டாங்க, அன்று முதலே அந்த உடைசல் வழியாகக் குடிநீரில், கழிவு நீர் கலந்துவர துவங்கிடுச்சி. இது சம்மந்தமா பலமுறை மாநகராட்சியில் கூறிவிட்டோம், மக்கள் பாதிக்கப்பட்ட பின்னாடிதான் ஓடிவராங்க" என்கிறார்கள். இதையடுத்து, கழிவுநீர் கலக்கும் இடத்தில் சீரமைக்கும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.