Skip to main content

“தமிழக காவல்துறையில் எடப்பாடி பழனிசாமியின் விபரீத விளையாட்டு''-திமுக துரைமுருகன் ஆவேசம்! 

Published on 25/10/2020 | Edited on 25/10/2020
dmk duraimurugan statement

 

தமிழக காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் ஐ.பி.எஸ்.சுக்கு பதவி உயர்வு அளித்து - சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி.யாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் “பிரகாஷ் சிங்” வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானதாகும். இந்த விவகாரம் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,  இது பற்றி ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். அந்த அறிக்கையில், 

"தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக - அதாவது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக திரு. திரிபாதி ஐ.பி.எஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் - தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக – போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள அதிகாரியை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.

அரசியல் ரீதியான அழுத்தங்கள் - சட்டவிரோத உத்தரவுகள் பிறப்பிப்பதைத் தவிர்க்கவே, தேசிய போலீஸ் கமிஷன் பரிந்துரைத்து - பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம், “சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்கு இரு வருடங்கள் பதவிக் காலம்” என்று வரையறுத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் - குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த காவல்துறை சீர்திருத்தச் சட்டத்திற்கே எதிராக முதலமைச்சர் - அதுவும் உள்துறையைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர்  பழனிசாமி செயல்படுகிறார்.

தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறைக்கு - குறிப்பாக சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலைகள் - அதுவும் கூலிப்படைகளை வைத்து நடத்தப்படும் கொலைகள் அன்றாடச் செய்திகளாகி விட்டன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமாகி - சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, காவல் நிலைய மரணங்கள் - குறிப்பாக, தூத்துக்குடி சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை, ரவுடிகளுக்குள் பட்டப் பகலில் நடக்கும் குத்து வெட்டுக்கள் -  'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது போன்ற பொது அமைதிச் சீர்குலைவு என, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மக்களுக்குச் சற்றும் பாதுகாப்பாற்ற மாநிலமாக மாறிவிட்டது.

ஆனால் இப்போது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அ.தி.மு.க. ஆட்சியின் டி.ஜி.பி. நியமனங்களில் எல்லாம் பிரகாஷ் சிங் வழக்கில் வரையறுத்துச் சொல்லப்பட்ட காவல்துறைச் சீர்திருத்தம் கைவிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மீறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் நேரத்தில் இரு வருடப் பதவிக் காலம் கொடுத்து டி.ஜி.பி. ஆக்குவது, முறைப்படி 2 வருட பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்ட டி.ஜி.பி.யை நள்ளிரவில் ராஜினாமா செய்ய வைப்பது என்று தொடர்ந்து - இப்போது புதிய உத்தியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரை டம்மியாக்குவதற்கு, அவருக்கு இணையாக ஒரு டி.ஜி.பி.யை அதே பொறுப்பில் அமர்த்துவது வரை, அ.தி.மு.க. அரசின் அத்துமீறல் படலம் நீண்டு வந்து நிற்கிறது.

தமிழகக் காவல்துறையைச் சீரழிக்கும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ராஜேஷ்தாஸ் என்ற ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுப்பது தவறில்லை. அவருக்கு வேறு பதவிகள் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால் அவரை ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்குப் போட்டியாக நியமிப்பதும் - அதுவும் அவரது அறைக்கு எதிரே ஒரு ரூமில் அமர்த்தி வைப்பதும் முதலமைச்சருக்கு அழகல்ல.

“இரட்டைத் தலைமையால்” அ.தி.மு.க.விற்குள் நடக்கும் கூத்துகள், டி.ஜி.பி. அலுவலகத்திலும் அரங்கேறட்டும்- அங்கும் நாமும் ஓ.பி.எஸ்ஸும் அடித்துக் கொள்வது போல் - அதிகாரிகளுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற இந்த விபரீத விளையாட்டு தமிழகக் காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இரண்டு டி.ஜி.பி.களுக்கு என்னென்ன பொறுப்பு?  தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்குக் கட்டுப்பட வேண்டுமா? அல்லது அதே தகுதியில் டி.ஜி.பி.யாக இருக்கும் “ஸ்பெஷல் டி.ஜி.பி.க்கு”கட்டுப்பட வேண்டுமா?

தலைமை அலுவலகத்தில் “பனிப்போர்” துவங்கினால், அது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல் நிலையங்களிலும் எதிரொலிக்கும் ; காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பிரதிபலிக்கும். தமிழகக் காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் அறவே தகர்த்து எறியப்பட்டு விடும்.

ஆகவே “ஒருங்கிணைப்பாளர்”, “இணை ஒருங்கிணைப்பாளர்” என்று அ.தி.மு.க.விற்குள் உருவாக்கியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் “டி.ஜி.பி.” - “ஸ்பெஷல் டி.ஜி.பி” என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று - பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார் துரைமுருகன்.

 

 

சார்ந்த செய்திகள்