கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது ஆத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை (22) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மணிமேகலை பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது தனது மனைவியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் பாலமுருகன்.
ஒரு ஆண்டாக பாலமுருகன் என்ன ஆனார் எங்கு இருக்கிறார் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. காணாமல்போன சில நாட்களில் அவரது உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டு, பாலமுருகன் உறவினர் கோவிந்தராஜ் திருநாவலூர் காவல் நிலையத்தில் பாலமுருகனை காணவில்லை அவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். போலீசார் கடந்த ஓராண்டாக பாலமுருகன் பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆனால் பாலமுருகன் பற்றிய தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்தநிலையில் பாலமுருகன் சொந்த ஊரரான ஆத்தூரை சேர்ந்த ஒரு நபரை பிடித்து தற்போது போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர் பாலமுருகன் மனைவி மணிமேகலையுடன் தமக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதற்கு இடையூறாக இருந்த மணிமேகலையின் கணவர் பாலமுருகனை தான் கொலை செய்து புதைத்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட பாலமுருகனை கொலை செய்து புதைத்து வைத்திருப்பதாக கூறப்படும் இடத்தை அடையாளம் காட்டுமாறு போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட நபர் பாலமுருகன் புதைக்கப்பட்ட இடத்தை போலீசாரிடம் அடையாளம் காட்டி உள்ளார்.
அந்த இடத்தில் தோண்டிப் பார்த்ததில் அங்கு பாலமுருகன் உடல் கிடைக்கவில்லை போலீஸிடம் பிடிபட்டுள்ள அந்த நபர் பாலமுருகன் புதைக்கப்பட்ட சரியான இடத்தை காண்பிக்காமல் போலீசாரை அலைகழித்து வருவதாகவும், அதனால் அவரிடமும் காணாமல் போன பாலமுருகன் மனைவியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலமுருகன் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டாரா இது பொய்யான தகவலா பாலமுருகன் என்ன ஆனார் என்பது விரைவில் தெரியவரும் என்கிறார்கள் திருநாவலூர் போலீசார்.