நாங்குநேரி இடைத்தேர்தலில் முதன் முதலாகப் பிரச்சாரத்தைத் துவக்கினார் தி.மு.க.வின் எம்.பி.யான கனிமொழி. இன்று தொகுதிக்குட்பட்ட களக்காடு நகரில் தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த கனிமொழி கூட்டணியின் வேட்பாளரான ரூபி மனோகரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அது சமயம் வேட்பாளர் ரூபி மனோகரன் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர், தி.மு.க.வினர் என திரளாக வந்திருந்தனர். பிறகு தேர்தல் பரப்புரை நடத்திய கனிமொழி.
இது மிக முக்கியமான இடைத்தேர்தல் அன்னை சோனியா, தளபதியின் ஆசி பெற்ற வேட்பாளர் ரூபி மனோகரனை எனக்கு நீண்ட நாளாகவே தெரியும். மக்களுக்கு உதவுபவர், எளிமையானவர். அவர் மக்களுடனேயே உங்களிடையே இருப்பார். உங்களுக்குத் தேவையானதை நிச்சயம் செய்வார். இடைத்தேர்தல் என்றதும் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எல்லோரும் இங்கே வருவார்கள்.
இதற்கு முன்பாக இது போன்று இங்கே இவர்கள் வந்தார்களா? மக்களின் தண்ணீர் பிரச்சினை, ரேசன் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்களா. எந்தப் பிரச்சினைகளைத்தான் தீர்த்து வைத்தார்கள். இந்த ஆட்சியில் எந்த ஒரு தொழிலையாவாது கொண்டு வந்தார்களா? யாருக்காவது வேலை கொடுத்திருக்கிறார்களா. வீட்டுக்கு வீடு படித்து வேலையில்லாமல் இருப்பவர்கள் அதிகம். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டதா வெளிநாடு தொழில் முதலீடுகள் வரும், வரும், என்று சொல்கிறார்கள். அதற்காகத் தான் தளபதி ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.
தலைவர் கலைஞர் ஆட்சியில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. அவர் வெளி நாடெல்லாம் செல்லவில்லை. ஆனா வெளிநாடு தொழில் முதலீடுகள் தமிழகத்தைத் தேடி வந்தது. இங்கேயுள்ள பச்சையாறு, கொடுமுடி ஆறு, ராமநதி, கடனாநதி, அடவிநயினார் அணை போன்ற அணைகள் அனைத்தும் கலைஞர் கொண்டு வந்தது. இவர்கள் எதையாவது செய்தார்களா? இந்தியில் படித்து இந்தியில் பரீட்சை எழுதினாத்தான் வேலையாம். நமக்குக் கிடைக்கிற வேலை வாய்ப்பையல்லாம் அவங்க தட்டிப் பறிச்சிட்டுப் போறாங்க. இதை தட்டிக் கேட்டதா இந்த அரசு. ஆனா நீட் தேர்வக் கொண்டு வந்து தமிழ் நாட்ட முடக்கிட்டாங்க. இந்த அரசு கேக்கல. இன்றைக்கும் வெளிநாட்டுல, இங்க பிரபலமா இருக்குற தமிழக டாக்டர்களெல்லாம் நீட் பரீட்சையா எழுதுனாங்க. நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு வரும் தளபதி ஸ்டாலின் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார். இந்தத் தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று பேசினார்.